நேற்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக முதல் டி20 போட்டியில் சதம் அடித்த சஞ்சு சாம்சனை இந்திய முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஆகாஷ் சோப்ரா வெகுவாகப் புகழ்ந்து பாராட்டி பேசி இருக்கிறார்.
பங்களாதேஷ் அணிக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் சதம் அடித்து இருந்தார். இதற்கு அடுத்து ஒரு மாதத்திற்கு மேல் கழித்து மீண்டும் திரும்பி வந்து தென் ஆப்பிரிக்க மண்ணில் அந்த அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் சதம் அடித்திருக்கிறார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடுத்தடுத்த சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்திருக்கிறார்.
சஞ்சு சாம்சன் அநீதி செய்கிறார்
இது குறித்து பேசி இருக்கும் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது “சஞ்சு சாம்சன் மிக அருமையாக பேட்டிங் செய்தார். முன்பு எல்லோரும் அவருக்காக நீதி கேட்டார்கள். தற்பொழுது அவர் பந்துவீச்சாளர்களுக்கு அநீதி செய்கிறார். அவர் தனது பாணியில் விளையாட ஆரம்பிக்கும்போது மொத்தமாக அழித்து விடுகிறார். ஆனால் எந்த சத்தமும் இருப்பதில்லை. அவர் 10 சிக்ஸர்கள் அடித்தார். அத்தனையும் டைமிங்கில் அற்புதமாக இருந்தது. எனவேதான் அதை பார்க்கும் பொழுது புகழ்ந்து கொண்டே இருக்க தோன்றுகிறது”
“சஞ்சு பேட்டிங் செய்யும்பொழுது பார்ப்பதற்கு மிகவும் எளிதாக தோன்றுகிறது. அவர் அப்படி நம்மை நினைக்க வைக்கிறார். அவருடைய பேட்டிங்கின் சிறப்பம்சம் அதுதான். அவர் இந்த போட்டியில் விளையாடிய விதம், இந்த போட்டியை தன் பெயரில் எழுதிக் கொண்ட விதத்தில் அவர் ஒரு ஸ்டார் வீரராக இருந்தார்”
சஞ்சு செய்தது சாதாரணமில்லை
“இந்தியாவில் கண்டிஷன் வேறு மாதிரி இருந்தது. ஹைதராபாத்தில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக சதம் அடித்த பொழுது அது தட்டையான ஆடுகளமாக இருந்தது. மேலும் அங்கிருந்த கண்டிஷன் குறித்து நமக்கு நன்றாக தெரியும். ஆனால் இங்கு வேகம் மற்றும் பவுன்ஸ் இருந்தது. மேலும் தென் ஆப்பிரிக்கா பவுலிங் யூனிட் முன்னால் நின்றது. மேலும் வானம் கொஞ்சம் மேகமூட்டமாக இருந்தது. இரண்டு போட்டிகளுக்கு இடையே நாட்கள் இடைவெளியும் இருந்தது”
இதையும் படிங்க : 2000-ல் சேவாக்குக்கு செஞ்சதை.. இப்ப அபிஷேக்குக்கு செய்யுங்க.. அதான் நியாயம் – ராபின் உத்தப்பா பேச்சு
“ஒரு போட்டியில் பார்ம் கிடைத்தால் அதை எடுத்துக்கொண்டு அப்படியே அந்த தொடரில் மேற்கொண்டு செல்லலாம். ஆனால் பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்ரிக்க டி20 தொடர்களுக்கு இடையே ஒன்றரை மாதங்கள் இடைவெளி இருந்தது.எனவே நீங்கள் மீண்டும் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பித்து எல்லாவற்றையும் செய்ய வேண்டும். எனவே சஞ்சு சாம்சன் அடுத்தடுத்து இரண்டு சதங்களை சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அடித்தது மிகப்பெரிய விஷயமாகும்” என்று கூறியிருக்கிறார்.






