தற்போது இங்கிலாந்து சென்றிருக்கும் இந்திய ஏ அணி இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாட்கள் கொண்ட முதல் டெஸ்ட் போட்டியில் முதல்நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 409 ரன்கள் குவித்து வலிமையான நிலையில் இருக்கிறது.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் ஜூன் 20ஆம் தேதி ஆரம்பிக்கிறது. இதற்கு முன்பாக இந்திய ஏ அணி அபிமன்யு ஈஸ்வரன் தலைமையில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக நான்கு நாட்கள் கொண்ட இரண்டு அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
சரிவிலிருந்து மீண்ட இந்தியா ஏ
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற இங்கிலாந்து லயன்ஸ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு கேப்டன் அபிமன்யு ஈஸ்வரன் 17 பந்தில் 8 ரன்கள், ஜெய்ஸ்வால் 55 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள்.
இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த கருண் நாயர் மற்றும் சர்பராஸ் கான் இருவரும் முதல் செஷன் முழுவதிலும் பொறுமையாக விளையாடி அணியின் விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தினார்கள். இதற்கு அடுத்து இரண்டாவது செஷனில் அதிரடியாக விளையாடிய இருவரும் அரை சதத்தை கடந்தார்கள்.
கருண் நாயர் மெகா சதம்
இந்த நிலையில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சர்பராஸ் கான் 119 பந்துகளில் 13 பவுண்டரிகள் உடன் 92 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். கருண் நாயர் மற்றும் சர்ப்ராஸ் கான் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 235 பந்துகளில் 181 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இந்த நிலையில் இன்னொரு முனையில் சிறப்பாக விளையாடிய கருண் நாயர் சதத்தை அடித்து அசத்தினார்.
இதையும் படிங்க : 3 ஐபிஎல் பைனல்ஸ்.. கோலி இதுவரை இறுதி போட்டிகளில் எப்படி ஆடி இருக்கிறார்.?. முழு புள்ளி விவரம்
இதற்கு அடுத்து கருண் நாயர் மற்றும் துருவ் ஜுரல் இருவரும் இணைந்து சிறப்பாக விளையாடி ஆட்டம் இழக்காமல் 204 பந்துகளில் 177 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்திருக்கிறார்கள். கருண் நாயர் ஆட்டம் இழக்காமல் 246 பந்துகளில் 24 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 186 ரன்கள், துருவ் ஜுரல் 104 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் உடன் 84 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார்கள். இந்திய ஏ அணி முதல் நாள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 90 ஓவர்களில் 409 ரன்கள் கொடுத்திருக்கிறது.






