ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு ஆர்சிபி அணி 9 ஆண்டுகளுக்கு பின் தகுதி பெற்றுள்ளது. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இதனால் 17 ஆண்டு கால ஆர்சிபி அணியின் கனவை இம்முறை அந்த அணி வீரர்கள் சாதிப்பார்கள் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கின்றனர்.
அதேபோல் ஆர்சிபி அணியின் நீண்ட பேட்டிங் லைன் அப் அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. விராட் கோலியை நம்பி ஆர்சிபி அணி இல்லையென்றாலும், விராட் கோலி ரன்கள் அடித்தால் மட்டுமே பெரிய ஸ்கோரை அந்த அணி எட்ட முடிகிறது. இதனை அனைத்து அணிகளும் நன்றாக கணித்திருக்கின்றனர்.
ஐபிஎல் பைனலில் விராட் கோலி
இதனால் ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறும் அணிகளின் முதல் குறி விராட் கோலியின் விக்கெட்டாக தான் இருக்கும். இதுவரை ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி 3 முறை விளையாடி இருக்கிறார். 2009ம் ஆண்டு டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி விளையாடியது.
அந்த போட்டியில் ஆர்சிபி அணி வெறும் 137 ரன்களை மட்டுமே சேர்த்த நிலையில், விராட் கோலி 7 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்பின் 2011ம் ஆண்டு சென்னை அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆர்சிபி அணி களமிறங்கியது. இந்த போட்டியில் ஆர்சிபி அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆர்சிபி அணி 147 ரன்களை மட்டுமே எடுத்தது. இதில் விராட் கோலி 32 பந்துகளில் 35 ரன்களை எடுத்தார்.
அகமதாபாத் மண்ணில் விராட் கோலி
பின் 2016ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் இறுதிப்போட்டியில் ஐதராபாத் அணியை எதிர்த்து ஆர்சிபி அணி விளையாடியது. இந்த போட்டியில் ஐதராபாத் அணி 209 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. இந்த போட்டியில் கெய்ல் – விராட் கோலி கூட்டணி 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. சிறப்பாக ஆடிய விராட் கோலி 35 பந்துகளில் 54 ரன்கள் எடுத்திருந்த போது, பரிந்தர் சரண் பந்தில் ஆட்டமிழந்தார்.
இதனால் 3 இன்னிங்ஸ்களில் விராட் கோலி 96 ரன்களை சேர்த்திருக்கிறார். இந்த 3 போட்டிகளிலும் ஆர்சிபி அணி சேஸிங்கில் தான் விளையாடி இருக்கிறது. அதேபோல் அகமதாபாத் மைதானத்தில் விராட் கோலி இதுவரை ஆடியுள்ள 6 இன்னிங்ஸில் 3 அரைசதம் உட்பட 219 ரன்களை விளாசி இருக்கிறார். இந்த சீசனில் விராட் கோலி அபாரமான ஃபார்மில் இருப்பதால், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





