4-1-17-6 ; உடல்நலமில்லாத என் தாய்க்காக விளையாடினேன். ஆட்டநாயகன் ஒபிட் மெக்காய் உருக்கம்!

0
174
Obed McCoy

இந்திய அணி இங்கிலாந்திலிருந்து வெஸ்ட்இன்டீஸ் சென்று ஷிகர் தவான் தலைமையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என கைப்பற்றியது. இந்தத் தொடருக்கு ஓய்வவளிக்கப்பட்ட ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அணிக்குத் திரும்ப ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வெஸ்ட்இன்டீஸ் அணியோடு இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் 68 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்று இருந்தது!

இதையடுத்து நேற்று இரண்டாவது போட்டி செயின்ட் கிட்ஸ், வார்னர் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. இந்திய நேரப்படி இரவு எட்டு மணிக்குத் துவங்க வேண்டிய ஆட்டம், வீரர்களின் லக்கேஜ்கள் வர தாமதமானதால் இரவு 11 மணிக்கே துவங்கியது. இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற வெஸ்ட்இன்டீஸ் அணி கேப்டன் நிக்கோலஸ் பூரன் பந்துவீச்சை தேர்வு செய்தார்!

- Advertisement -

இதையடுத்து ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் களமிறங்க, ரோகித் சர்மா ஒபிட் மெக்காய் வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆனார். இதற்கடுத்து சூர்யகுமார், ரவீந்திர ஜடேஜா, தினேஷ் கார்த்திக், ஆர்.அஷ்வின், புவனேஷ்வர்குமார் என ஆறு விக்கெட்டுகளை ஒரு மெய்டனோடு 17 ரன்கள் மட்டுமே தந்து ஒபிட் மெக்காய் வீழ்த்தினார். இந்திய அணி 19.4 ஓவர்களில் 138 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய அணியில் ஹர்திக் பாண்ட்யா மட்டுமே நிலைத்து நின்று 31 பந்துகளுக்கு 31 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 139 ரன்கள் என்ற சிறிய இலக்கோடு வெஸ்ட் இன்டீஸ் அணி களமிறங்க, இந்த ஆட்டத்திற்கு வந்திருந்த பிரன்டன் மெக்கல்லம் மிகச்சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்தார். ஒருபுறம் வெஸ்ட் இன்டீஸ் வெற்றியை நோக்கி நகர்ந்தாலும், இன்னொரு புறம் இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் மிகச்சிறப்பாகப் பந்துவீசி ஆட்டத்தை கடைசி ஓவர் வரை இழுத்துச் சென்றார்கள். கடைசி ஓவருக்கு 10 ரன்கள் தேவைப்பட, கடைசி ஓவரை வீசிய ஆவேஷ்கான் முதல் பந்தை நோ-பாலாக வீசி, அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸரும், பவுண்டரும் தர, வெஸ்ட் இன்டீஸ் 19.2 ஓவர்களில் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வென்றது!

ஆட்டத்தின் முடிவுக்குப் பிறகு பரிசளிப்பு நிகழ்வில் ஆட்டநாயகன் விருது ஆறு விக்கெட்டுகளை வீழ்த்திய ஒபிட் மெக்காய் ஆட்டநாயகன் விருது பெற்றார். விருது பெற்ற பின் ஆட்டம் குறித்த அவரது பேச்சு உருக்கமாக அமைந்திருந்தது!

- Advertisement -

ஒபிட் மெக்காய் கூறும்பொழுது “இதற்கு இதைத்தான் சொல்ல வேண்டும், கடவுளுக்கு நன்றி. நான் என் அம்மாவுக்காக இதைச் செய்கிறேன். அவர் உடல்நலமில்லாமல் வீட்டில் இருக்கிறார். இந்தச் சூழல் அவருக்காக நான் எதையாவது செய்ய வேண்டா என்னைத் தூண்டி சிறப்பாகச் செயல்பட வைக்கிறது. ரோகித் சர்மாவை முதல் பந்தில் வீழ்த்தவும், அது அவர்களது பேட்டர்களுக்கு அதிக அழுத்தத்தை உருவாக்கியது. நான் எப்பொழுதுமே விக்கெட்டுகளை தேடுவேன். விக்கெட்டுகள் மட்டுமே பவர்-ப்ளேவில் ரன்களை தடுக்கும். கடந்த ஆட்டத்தில் அதிகம் யோசித்தேன். இந்த ஆட்டத்தில் தெளிவான மனதுடன் உள்ளே சென்றேன். பவர்-ப்ளே மற்றும் இறுதிக்கட்டத்தில் பந்து வீசுவது புதிய சவாலையும், அனுபவத்தையும் தருகிறது. இது என்னை ஒரு வீரராக வளர்க்கிறது!” என்று தெரிவித்தார்!