தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கும் இந்திய அணிக்கு டாஸில் அதிர்ஷ்டம் இல்லாததும் ஒரு காரணம் என்று இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்திருந்தால் இந்தியா இப்போது மிகச் சிறந்த நிலையில் இருந்திருக்கும் என்று அவர் கூறினார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 4-வது நாளில் தென்னாப்பிரிக்கா மீண்டும் இந்தியாவை ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது இன்னிங்ஸை 26-0 என்ற நிலையில் தொடங்கிய தென்னாப்பிரிக்கா 260-5 என்ற நிலையில் டிக்ளேர் செய்தது.
டாஸ் ஜெய்க்கவில்லை:
549 ரன்கள் என்ற மலை போன்ற இலக்கை துரத்திய இந்தியா, நாள் முடிவில் 27 ரன்களுக்கு 2 விக்கெட் என்று தத்தளித்தது. அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜடேஜா, இந்தியாவுக்கு இந்த டெஸ்ட் தொடரில் எதுவும் சரியாக அமையவில்லை என்று ஒப்புக்கொண்டார். “கிரிக்கெட்டில் எல்லாமே டைமிங்தான். டாஸிலிருந்து ஆரம்பிக்கிறது.
இந்த பிட்ச்சில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்திருந்தால், இப்போது நல்ல நிலையில் இருந்திருப்போம். ஆனால் இது விளையாட்டின் ஒரு பகுதி. இப்போது 5-வது நாளில் நன்றாக விளையாடி, எங்கள் டிஃபென்ஸை நம்ப வேண்டும். நாங்கள் பந்துவீசிய போது பந்து சற்று டர்ன் ஆனது. ஆனால் அவர்கள் ஏற்கனவே மிகப்பெரிய லீடு வைத்திருந்ததால், ‘பந்து டர்ன் ஆகிறதே’ என்ற பதற்றம் அவர்களுக்கு இல்லை.”
ஆடுகளத்தில் சிக்கல்:
“நாளை 5-வது நாள் என்பதால் பந்து இன்னும் அதிகமாக டர்ன் ஆகும். பவுன்ஸும் அதிகமாகும். நாளை ஒவ்வொரு செஷனாக நன்றாக விளையாட வேண்டும். முதல் செஷனில் நன்றாக ஆரம்பித்து விக்கெட்டுகளை கொடுக்காமல் இருக்க வேண்டும். அப்போது பவுலர்களுக்கே அழுத்தம் வரும். எங்களை ஆட்டமிழக்க வைக்க வேண்டும் என்று.
இதையும் படிங்க: இந்திய அணியை புலம்ப வைக்க பிளான் பண்ணினோம்.. இந்த 2 விஷயத்தை செஞ்சோம் – தென் ஆப்பிரிக்க பயிற்சியாளர் பேட்டி
முழு நாளையும் நாங்கள் ஆடி முடித்தால், அது எங்களுக்கு வெற்றிக்கு சமமாகத்தான் இருக்கும்,” என்று ஜடேஜா கூறினார். 4-வது நாள் முடிவில் சாய் சுதர்ஷன் 2 ரன்னுடனும், குல்தீப் யாதவ் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். ஓப்பனர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 13 ரன்களும்,மற்றும் கே.எல். ராகுல் ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.






