சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தடுமாறி வருகிறது. துபாயில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
ஆடுகளம் போகப்போக தோய்வாக மாறும் என்பதால் முதலில் பேட்டிங் செய்வது நல்ல விஷயம்.
இதனால் பெரிய அளவு ரன்கள் குவித்து இந்திய அணிக்கு பாகிஸ்தான் நெருக்கடியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பாகிஸ்தான அணி ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து தோல்வியை தழுவி வருகிறது.
ஹர்திக்கிடம் சிக்கிய பாபர் அசாம்:
கடைசியாக 2017 ஆம் ஆண்டு தான் பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு எதிராக 50 ஓவர் போட்டிகளில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் முதலில் தொடக்க வீரராக களமிறங்கிய பாபர் அசாம் கடும் நெருக்கடியில் இருந்தார். நியூசிலாந்துக்கு எதிரான முதல் லீக் ஆட்டத்தில் பாபர் அசாம், டெஸ்ட் போட்டியில் போல் விளையாடினார்.
இந்த விமர்சனம் காரணமாக, இன்றைய ஆட்டத்தில் அவர் அதிரடியை காட்டினார். 26 பந்துகளை எதிர்கொண்ட பாபர் அசாம் ஐந்து பவுண்டரிகளை விளாசி 23 ரன்கள் சேர்த்தார். பாபர் அசாம் அபாயகரமாக விளங்கிய நிலையில் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ராகுலிடம் கேட்ச் ஆனார்.
பை,பை காட்டிய ஹர்திக்:
பாபர் அசாம் விக்கெட்டை எடுத்தவுடன் ஹர்திக் பாண்டியா அவருக்கு பை, பை என சைகையில் காட்டினார். இது இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினாலும், பாகிஸ்தான் ரசிகர்களை கோபம் அடைய செய்தது. பாபர் அசாமை அவமதிக்கும் விதத்தில் ஹர்திக் பாண்டியா நடந்து கொண்டதாக பாகிஸ்தான் ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க- பாகிஸ்தான் அணிக்கு இந்த தகுதி போயிடுச்சு.. இனி இந்தியாவை எப்படி பார்ப்பாங்கனு தெரியல – அனில் கும்ப்ளே விமர்சனம்
எனினும் இதற்கு பதிலடி கொடுத்துள்ள இந்திய ரசிகர்கள் துபாய் மைதானத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள் ஹர்திக் பாண்டியாவிடம் வம்பு இழுத்ததாகவும், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தான் ஹர்திக் செயல்பட்டதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள். இதேபோன்று இமாம் உல் ஹக்கும் 10 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட் ஆனார். இதனால் பாகிஸ்தான் அணி 9.2 ஓவரில் 47 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்தது.






