சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இறுதிப்போட்டியில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது.
இதை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா அபாரமாக விளையாடி 76 ரன்கள் சேர்த்தார். இதைப் போன்று நடு வரிசையில் ஸ்ரேயாஸ் ஐயர் 48 ரன்களும் இறுதியில் கே எல் ராகுல் 34 ரன்களும் எடுக்க இந்திய அணி ஆறு பந்துகள் எஞ்சிய நிலையில் நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.
இந்த சூழலில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பரிசளிக்கும் விழாவில் பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, ஐசிசி தலைவர் ஜெய்ஷா உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.பாகிஸ்தான் சார்பாக எந்த ஒரு நிர்வாகியும் இடம்பெறவில்லை. இதுதான் தற்போது சர்ச்சையில் ஏற்படுத்தி இருக்கிறது.
புறக்கணித்த பாகிஸ்தான்:
இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சோயிப் அக்தர், இந்திய அணி சாம்பியன்ஸ் கோப்பையை வென்றிருக்கிறது. ஆனால் பரிசளிக்கும் நிகழ்ச்சியில் நான் ஒரு வினோதமான நிகழ்வை கண்டேன். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் இருந்து எந்த ஒரு நபரும் அந்த மேடையில் இடம்பெறவில்லை.
பாகிஸ்தான் தான் இந்தத் தொடரை நடத்துகிறது. அப்படி இருக்கும்போது ஏன் யாரும் இறுதிப் போட்டிக்கு வரவில்லை. இந்த லாஜிக்கை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. பாகிஸ்தான் சார்பாக ஏன் யாரும் வந்து கோப்பையை வழங்கவில்லை. இதைப் பற்றி யோசியுங்கள். இது உலக மேடை. இந்த தொடரை பாகிஸ்தான் தான் நடத்துகிறது.
சோயிப் அக்தர் கேள்வி:
அப்படி இருக்கும்போது நீங்கள் கண்டிப்பாக இறுதிப் போட்டிக்கு வந்து இருக்க வேண்டும். ஆனால் யாரும் வராதது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது என்று சோயிப் அக்தர் கூறியிருந்தார். பாகிஸ்தானில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி போட்டியில் பிசிசிஐ சார்பாக ராஜூவ் சுக்லா பங்கு பெற்று பரிசளிக்கும் நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்தார்.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி 2025: வழங்கப்பட்ட மொத்த விருதுகள் மற்றும் பரிசுத்தொகை.. முழு விவரங்கள்
ஆனால் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் அனைவரும் புறக்கணித்து இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் சிறப்பு தூதராக பாகிஸ்தான் வீரர் சையது அப்ரிடி நியமிக்கப்பட்ட நிலையில், அவரும் இந்த இறுதிப் போட்டியில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






