அண்டர் 19 ஆசிய கோப்பை போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் வைத்து நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் கலந்து கொள்ளும் இந்த போட்டித் தொடரின் முதல் போட்டியில் இன்று இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆட்டத்தின் துவக்கம் முதலே இந்திய வீரர்கள் மிகச் சிறப்பாக பந்து வீசினர். இதனால் ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் ரன் எடுக்க முடியாமல் திணறினர். அந்த அணியின் துவக்க வீரர் வாபியுல்லாஹ் 15 ரன்னில் ஆட்டம் இழந்தார்.
இவரைத் தொடர்ந்து இரண்டாவது விக்கெட்டுக்கு களம் இறங்கிய சொகைல் கான் துவக்க வீரர் ஜம்ஷித் ஜத்ரானுடன் இணைந்து அணியை ஆரம்பகட்ட சரிவில் இருந்து மீட்க போராடினார். எனினும் அவர் 12 ரன் எடுத்து அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜம்ஷித் ஜத்ரான் 75 பந்துகளில் நான்கு பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
இதற்குப் பிறகு வந்த வீரர்களில் அக்ரம் முஹம்மத் 20 ரன்னிலும் நூமான் ஷா 25 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். இவர்களைத் தொடர்ந்து முகம்மது யூனுஸ் 26 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இழக்க ரன்களில் ஆட்டம் இழந்ததால் ஆப்கானிஸ்தான் 50 ஓவர்கள் முடிவில் 173 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் பந்துவீச்சில் ராஜ் லிம்பானி மற்றும் அர்சின் குல்கர்னி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும் நமன் திவாரி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ஆதர்ஷ் சிங் 14 ரன்னில் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து மூன்றாவதாக களம் இறங்கிய ருத்ரா பட்டேல் 5 ரன்னில் அவுட் ஆனார். இதனால் இந்திய அணி 32 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்து தடுமாறியது. எனினும் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இந்திய அணியின் கேப்டன் உதய் சஹரன் மற்றும் துவக்க வீரர் அர்சின் குல்கர்னி ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்தியாவை சரிவிலிருந்து மீட்டனர்.
இவர்கள் இருவரும் இணைந்து மூன்றாவது விக்கெட் பார்ட்னர்ஷிப்பாக 54 ரன்கள் சேர்த்த நிலையில் கேப்டன் உதய் சஹரன் 49 பந்துகளில் இரண்டு பவுண்டரிகளுடன் 20 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து களம் இறங்கிய ஆல்ரவுண்டர் முஷீர் கான் அர்சின் குல்கர்னி உடன் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது. சிறப்பாக விளையாடிய அர்சின் குல்கர்னி அரை சதம் எடுத்தார்.
நான்காவது விக்கெட்டுக்கு இவர்கள் இருவரும் சேர்ந்து 104 ரன்கள் எடுத்தனர். இதனால் இந்திய அணி 37.3 ஓவர்களில் 174 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் இழந்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.அர்சின் குல்கர்னி 105 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 70 ரன்கள் எடுத்து நாட் அவுட் ஆக இருந்தார். இவருடன் சிறப்பாக விளையாடிய முசிர் கான் 58 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இந்த வெற்றியின் மூலம் ஆசிய கோப்பை அண்டர் 19 தொடரில் இந்தியா தனது வெற்றிக் கணக்கை தொடங்கி இருக்கிறது.