டி20 உலகக் கோப்பைக்குப் பின் நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி – போட்டி அட்டவணை வெளியீடு

0
29
Kane Williamson and Rohit Sharma

இரண்டு மாதம் இந்திய கோடைக்காலத்தில் இடைவிடாது கிரிக்கெட் ஆடிய இந்திய வீரர்கள் அடுத்து உள்நாட்டில் தென் ஆப்பிரிக்க அணியோடு ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி முடித்த கையோடு, அயர்லாந்து அணியுடன் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவும், இங்கிலாந்து அணியோடு மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்களிலும் பங்கேற்க சென்றுவிட்டது.

இந்த இரண்டு தொடர்களிலும் பங்கேற்றும் இந்திய அணி இங்கிலாந்தில் இருந்து இந்தியா திரும்பாமல் வெஸ்ட் இன்டீஸோடு டி20 மற்றும் ஒருநாள் போட்டி தொடர்களில் பங்கேற்க செல்கிறது. அந்த இரண்டு தொடர்களையும் முடித்துவிட்டு, அங்கிருந்து நேராக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க கிளம்புகிறது. உலக கிரிக்கெட்டில் தற்போது அதிகபட்ச பணிச்சுமையைக் கொண்டிருப்பவர்கள் இந்திய அணி வீரர்களாகத்தான் இருப்பார்கள்.

இதேபோல் ஐ.பி.எல் முடிந்த கையோடு நியூசிலாந்து அணி இங்கிலாந்திற்கு மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க சென்றது. இந்தத் தொடரில் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் நியூசிலாந்து அணி தோற்று வொய்ட்வாஷாகி இழந்தது.

இதையடுத்து நியூசிலாந்து அணி அடுத்தடுத்து பங்கேற்கும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களைப் பற்றியான அறிவிப்பை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்டு உள்ளது. வருகின்ற டி20 உலகக்கோப்பை தொடர் முடிந்து இந்தியா உடன் இரு வெள்ளைப்பந்து கிரிக்கெட் தொடர்கள், பாகிஸ்தான் பங்களாதேஷோடு முத்தரப்பு தொடர், 2023ஆம் ஆண்டு இங்கிலாந்து அணியுடன் இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர், அடுத்து இலங்கை அணியுடனான மூன்று வடிவ கிரிக்கெட் தொடர்கள் இதில் அடக்கம்.

இந்திய அணி டி20 உலகக்கோப்பை முடிந்து நவம்பர் மாதம் நியூசிலாந்திற்குச் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்திய அணியின் நியூசிலாந்து சுற்றுப்பயண போட்டி அட்டவணை கீழே:

முதல் டி20 – வெலிங்கடன் மைதானம் – நவம்பர் 18

இரண்டாவது டி20 – மவுன்ட் மவுங்கனி – நவம்பர் 20

மூன்றாவது டி20 – நேப்பியர் – நவம்பர் 22

முதல் ஒருநாள் போட்டி – ஆக்லாந்து- நவம்பர் 25

இரண்டாவது ஒருநாள் போட்டி – ஹாமில்டன் – நவம்பர் 27

மூன்றாவது ஒருநாள் போட்டி – கிறைஸ்ட்சர்ச் – நவம்பர் 27