தற்போது இங்கிலாந்து அணி சொந்த நாட்டில் இலங்கை அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கேஸ் அட்கின்சன் அதிரடி சதம் அடித்து சாதனை படைத்திருக்கிறார்.
இந்தத் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணியின் அதிவேகப் பந்துவீச்சாளர் மார்க் வுட் காயம் அடைந்ததால் மேற்கொண்டு தொடரில் இருந்து வெளியேறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜோ ரூட் ஆதிக்கம்
இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீசுவது என அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 40 ரன்கள் எடுத்தார். அடுத்து ஹாரி குரூப் 33, ஜேமி ஸ்மித் 21 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள்.
இதைத்தொடர்ந்து ஒரு மனையில் மிகச் சிறப்பாக விளையாடிய ஜோ ரூட் நேற்று முதல் நாளில் 143 ரன்கள் குவித்து அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜோ ரூட்டுக்கு 33வது சதமாக அமைந்தது. மேலும் இங்கிலாந்துக்கு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்திருந்த அலைஸ்டர் குக் சாதனையையும் சமன் செய்தார்.
இரண்டாவது நாளில் அட்கின்சன் சாதனை
இதைத் தொடர்ந்து இரண்டாவது நாளில் பேட்டிங் வரிசையில் எட்டாவது வந்த வேகப்பந்துவீச்சாளர் கஸ் அட்கின்சன் மிகச் சிறப்பாக விளையாடி அதிரடியாக சதம் அடித்தார். 115 பந்துகளை எதிர்கொண்ட அவர் 15 பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 118 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இறுதியாக இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்சில் 427 ரன்கள் எடுத்தது. இலங்கை தரப்பில் அசிதா பெர்னாடோ நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இதையும் படிங்க : பங்களாதேஷ் 2வது டெஸ்ட்.. இன்னொரு வரலாற்று தோல்விக்கு தயாராகும் பாகிஸ்தான்.. விதி மாறுமா?
மேலும் இந்த போட்டி நடைபெறும் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 2024 ஒரே சீசனில் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டையும், ஒரு டெஸ்ட் போட்டியில் சதமும் அடித்த இரண்டாவது வீரர் என்கின்ற அரிய சாதனையை படைத்திருக்கிறார். இதற்கு முந்தைய டெஸ்ட் தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 10 விக்கெட்டுகள் லார்ட்ஸ் மைதானத்தில் கைப்பற்றி இருந்தார். மேலும் இவருக்கு முன்பாக ஒரே சீசனில் இந்த மைதானத்தில் ஒரு டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் மற்றும் சதமும் அடித்த வீரராக இங்கிலாந்தின் இயான் பவுத்தம் இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது!