தற்போது பாகிஸ்தானில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்த போட்டியில் கைக்கு கிடைத்த ஆட்டத்தை பாகிஸ்தான் அணி இழந்து இருக்கிறது.
நேற்று முன்தினம் துவங்கிய இந்த போட்டியில் முதல் நாள் மழையின் காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது நாள் நேற்று டாஸ் போடப்பட்டு பங்களாதேஷ் அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
பாகிஸ்தான் கைவிட்ட முதல் வாய்ப்பு
இந்த நிலையில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணிக்கு ரன் கணக்கை துவங்குவதற்கு முன்பாகவே அப்துல்லா ஷபிக் வெளியேறினார். இதைத் தொடர்ந்து இன்னொரு துவக்க ஆட்டக்காரர் சையும் அயூப் 58, கேப்டன் ஷான் மசூத் 57 ரன்கள் எடுத்து நூறு ரன்னுக்கும் மேலான பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்தினார்கள்.
ஆனால் பாகிஸ்தான் அணி இந்த துவக்கத்தை பயன்படுத்திக் கொள்ளவில்லை. பாபர் அசாம் 31, சவுத் ஷகீல் 16, முகமது ரிஸ்வான் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார்கள். கடைசியில் ஆகா சல்மான் சிறப்பாக விளையாடி 54 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணி 274 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. பங்களாதேஷ் தரப்பில் மெகதி ஹசன் மிராஸ் ஐந்து விக்கெட் கைப்பற்றினார். இரண்டாவது நாள் முடிவில் பங்களாதேஷ் அணி 10 ரன்கள் எடுத்து விக்கெட் இழப்பில்லாமல் நின்றது.
பாகிஸ்தான் கைவிட்ட இரண்டாவது வாய்ப்பு
இந்த நிலையில் இன்று தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் அணி 26 ரன்னில் முக்கிய ஆறு விக்கெட்டுகளை இழந்து விட்டது. கடைசி பேட்ஸ்மேன் ஜோடியாக களத்தில் லிட்டன் தாஸ் மற்றும் மெகதி ஹசன் மிராஸ் மட்டுமே இருந்தார்கள். இந்த ஜோடியில் ஒரு விக்கெட்டை எடுத்தால் கூட, பங்களாதேஷ் அணியை 100 ரன்களுக்குள் சுருட்டி, பெரிய முன்னிலையைப் பெற்று போட்டியை வென்று தொடரை சமன் செய்து விடலாம் என்கின்ற நல்ல வாய்ப்பு பாகிஸ்தான் அணிக்கு கிடைத்தது.
இந்த அருமையான வாய்ப்பை பாகிஸ்தான் அணி கோட்டை விட்டது. இந்த ஜோடி மிகச் சிறப்பாக விளையாடி 245 பந்துகள் நின்று 165 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. மெகதி ஹசன் மிராஸ் 128 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 78 ரன்கள் எடுத்தார். சிறப்பாக விளையாடிய ரிட்டன் தாஸ் சதம் அடித்து 228 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 138 ரன்கள் குவித்தார். பாகிஸ்தான் தரப்பில் குர்ரம் சேஷாத் ஆறு விக்கெட் கைப்பற்றினார்.
இதையும் படிங்க : கிறிஸ் கெயில் 9 வருட அசாதாரண சாதனை.. பூரன் சாதாரணமாக முறியடிப்பு.. டி20 கிரிக்கெட்டில் அசுர வேகத்தில் முன்னேற்றம்
பாகிஸ்தான் அணி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தாமல் 12 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றது. மேலும் தனது இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய பாகிஸ்தான் அணி 9 ரன்னுக்கு அப்துல்லா ஷபிக் மற்றும் நைட் வாட்ச்மேன் குர்ரம் சேஷாத் என 2 விக்கெட்டுகளை இழந்தது. தற்போது இரண்டாம் நாள் ஆட்ட நேரம் முடிவில் பாகிஸ்தான அணி 21 ரன்கள் முன்னிலை எடுத்து இருக்கிறது. இன்னும் இரண்டு நாட்கள் எஞ்சி இருக்கும் நிலையில் இரண்டாவது டெஸ்ட் பரபரப்பாக மாறி இருக்கிறது.