நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு தற்போது 533 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.
இங்கிலாந்து அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இந்த தொடரின் முதல் போட்டியை இங்கிலாந்து அணி வென்றிருந்தது. தற்போது இரண்டாவது போட்டியையும் வெல்வதற்கு மிக அருகில் இருக்கிறது.
இங்கிலாந்து அதிரடி பேட்டிங் மற்றும் பவுலிங்
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது. இங்கிலாந்து அணிக்கு தனி ஒரு வீரராக நின்று அதிரடி காட்டிய ஹாரி புரூக் 115 பந்துகளில் 123 ரன்கள் குவித்தார். இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 250 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து பந்துவீச்சில் நாதன் ஸ்மித் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இதைத் தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி 125 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக சொந்த மண்ணில் சுருண்டது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 37 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து பந்துவீச்சில் பிரைடன் கார்ஸ், கஸ் அட்கின்சன் தலா 4 விக்கெட் கைப்பற்றினார்கள்.
மீண்டும் அதிரடியில் இறங்கிய இங்கிலாந்து
இதை தொடர்ந்து நல்ல முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இங்கிலாந்து அணி மீண்டும் அதிரடியில் இறங்கியது. அந்த அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் பென் டக்கெட் 112 பந்துகளில் 92 ரன்கள், ஜேக்கப் பெத்தேல் 118 பந்துகளில் 96 ரன்கள், ஹாரி புரூக் 61 பந்தில் 55 ரன்கள் எடுத்தார்கள்.
இதையும் படிங்க : 243 ரன்.. தென் ஆப்ரிக்காவுக்கு இலங்கை அணி பதிலடி.. இந்தியா ஃபைனல் வாய்ப்பு அதிகரிப்பு
இன்று இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 378 ரன்கள் எடுத்து 533 ரன்கள் முன்னிலை பெற்று அபாரமான நிலையில் இருக்கிறது. தற்போது அந்த அணிக்கு களத்தில் ஜோ ரூட் 106பந்துகளில் 77 ரன்கள், கேப்டன் ஸ்டோக்ஸ் 26 பந்தில் 35 ரன்கள் எடுத்து களத்தில் நிற்கிறார்கள். இந்த தொடரை நியூசிலாந்து தோற்பது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது!






