பாகிஸ்தானில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் மீண்டும் பாகிஸ்தான் அணியின் பேட்டிங் எதிர்பார்த்த அளவுக்கு அமையாமல் ஏமாற்றம் கொடுத்திருக்கிறது.
இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் பங்களாதேஷ் அணி மிகச் சிறப்பாக விளையாடி 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை வென்று தொடரில் முன்னிலை வகிக்கிறது. மேலும் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான பங்களாதேஷ் அணிக்கு முதல் வெற்றி இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
நம்பிக்கை தந்த பாகிஸ்தான் ஜோடி
இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று அதிகாரப்பூர்வமாக தோன்றிய தொடங்கியது. ஆனால் மழை காரணத்தால் டாஸ் போடப்படவில்லை. இன்று இரண்டாவது நாளில் போட்டிக்கான டாசில் வென்ற பங்களாதேஷ் முதலில் பந்துவீச்சை மீண்டும் தேர்ந்தெடுத்தது.
பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபிக் 6 பந்துகளை சந்தித்து ரன்கள் ஏதும் எடுக்காமல் வெளியேறினார். இந்த நிலையில் இரண்டாவது விக்கட்டுக்கு இளம் தொடக்க ஆட்டக்கார சையும் அயூப் மற்றும் கேப்டன் ஷான் மசூத் இருவரும் இணைந்து 159 பந்துகளில் 107 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.
பாபர் அசாம் மீண்டும் ஏமாற்றம்
சையும் அயூப் 58, ஷான் மசூத் 57 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத்தொடர்ந்து களத்திற்கு வந்த நட்சத்திர ஆட்டக்காரர் பாபர் அசாம் தாக்குப்பிடித்து விளையாட ஆரம்பித்தார். எனவே பெரிய ஸ்கோர் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் 31 ரன்கள் எடுத்து மீண்டும் ஏமாற்றம் தந்து வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து துணை கேப்டன் சவுத் ஷகில் 16, முகமது ரிஸ்வான் 23, ஆகா சல்மான் 54 என பேட்ஸ்மேன்கள் தங்கள் பங்குக்கு ரன்கள் எடுத்தார்கள். இறுதியாக பாகிஸ்தான் அணி 85.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்கள் மட்டுமே எடுத்தது. முதல் நாள் மழையின் காரணமாக கைவிடப்பட, பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்ஸில் குறைந்த ஸ்கோர் எடுத்திருப்பதும், இந்த டெஸ்ட் தொடரை பங்களாதேஷ் வெல்வதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
இதையும் படிங்க : 20 ஓவரில் 305 ரன்.. 31 சிக்ஸ்.. ஆயுஷ் பதோனி ஆர்யா உலக சாதனை பார்ட்னர்ஷிப்.. டெல்லி டி20 லீக் 2024
முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்த பங்களாதேஷ் வீரர் மெகதி ஹசன் மிராஸ் இந்த முறையும் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் கைப்பற்றி அசத்தியிருக்கிறார். டக்கின் அஹமத் மூன்று விக்கெட் கைப்பற்றி இருக்கிறார். மேலும் இன்றைய போட்டியில் இரண்டு ஓவர்கள் விளையாடிய பங்களாதேஷ் அணி விக்கெட் இழப்பில்லாமல்10 ரன்கள் எடுத்திருக்கிறது.