இலங்கை அணி தங்களது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் மிகுந்த தடுமாற்றத்தை சந்தித்து வருகிறது. ரன்கள் குவிக்க முடியாமல் முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகளை இழந்திருக்கிறது.
தற்போது இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் இடம்பெறாததால் ஸ்மித் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். அவரது தலைமையின் கீழ் ஆஸ்திரேலியா அணி முதல் டெஸ்ட் போட்டியை இன்னிங்ஸ் மற்றும் 242 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்டமான முறையில் வெற்றி பெற்றது.
சொந்த மண்ணில் சோகம்
முதல் டெஸ்ட் போட்டியில் தங்களது பேட்ஸ்மேன்கள் மோசமான ஷார்ட் செலேக்சன் செய்திருந்தார்கள் என தலைமை பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த போட்டியில் முக்கியமான டாஸ் வென்று முதலில் இலங்கை பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங் செய்ய வந்த இலங்கை அணிக்கு பதும் நிஷாங்கா 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். இதைத் தொடர்ந்து திமுத் கருணரத்தினே 36, தினேஷ் சண்டிமல் 74 ரன்கள் என ஓரளவு நல்ல பங்களிப்பை கொடுக்க. இலங்கை அணி முதல் மூன்று விக்கெட் இழப்புக்கு நல்ல நிலையில் காணப்பட்டது. ஆனால் இதைத் தொடர்ந்து அந்த அணி ரன்கள் எடுக்க சிரமப்பட்டதோடு விக்கெட்டுகளையும் சொந்த மண்ணில் இழந்த சோகம் நடந்தது.
ஆஸ்திரேலியா அணி ஆதிக்கம்
இதற்கு அடுத்து இலங்கை அணிக்கு ஏஞ்சலோ மேத்யூஸ் 1, கமிந்து மெண்டிஸ் 13, தனஞ்செய டி சில்வா 0 ரன் முன்னணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதைத்தொடர்ந்து தாக்குப் பிடித்து விளையாடிய குசால் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 59 ரன் எடுத்திருக்கிறார். இவருக்கு ஒத்துழைப்பு கொடுத்த ரமேஷ் மெண்டிஸ் 28 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க : இந்திய அணியை நிச்சயம் தோற்கடிப்போம்.. இந்த 3 டீம் செமி பைனல் வரும் – சோயப் அக்தர் கணிப்பு
இன்றைய முதல் நாள் முடிவில் இலங்கை அணி 90 ஓவர்களில் 2.54 ரன் ரேட்டில் 9 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆஸ்திரேலியா அணியின் தரப்பில் நாதன் லயன் மற்றும் மிட்சல் ஸ்டார்க் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்கள். இந்த போட்டியில் 93 ரன்னுக்கு ஒரு விக்கெட் மட்டும் இழந்திருந்த இலங்கை அணி மேற்கொண்டு 136 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகளை இழந்தது குறிப்பிடத்தக்கது.






