தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்டு சுருட்டி இருக்கிறது.
இந்த போட்டிக்கான டாசில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்து வீசியது. இந்திய அணி முதல் நாளில் ரவிச்சந்திரன் அஸ்வின் சதம் அடிக்க ஆறு விக்கெட் இழப்புக்கு 339 ரன்கள் எடுத்தது. இன்று இரண்டாவது நாள் ஆட்டத்தில் 376 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் தரப்பில் ரவிச்சந்திரன் அஸ்வின் 113 ரன்கள் எடுத்தார். பங்களாதேஷ் தரப்பில் ஹசன் மக்முத் 5 விக்கெட் கைப்பற்றினார்.
பங்களாதேஷை சுருட்டிய இந்திய பவுலிங் யூனிட்
இதைத் தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸ் விளையாட ஆரம்பித்த பங்களாதேஷ் அணிக்கு எல்லாமே அதிர்ச்சியாகவே அமைந்திருந்தது. அந்த அணி கிடைத்த சில ஓவர்களில் மதிய உணவு இடைவேளைக்கு முன்பாக மூன்று விக்கெட்டுகளை இழந்தது. அதில் இரண்டு விக்கெட்டுகளை ஆகாஷ் தீப் கைப்பற்றி இருந்தார்.
இதைத்தொடர்ந்து மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு வந்த பங்களாதேஷ் கொத்து கொத்தாக விக்கெட்டுகளை இழந்தது. அந்த இரண்டாவது செஷனில் பங்களாதேஷ் அணி ஆறு விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக லிட்டன் தாஸ் 22 ஷாகிப் அல் ஹசன் 32 ரன்கள் எடுத்தார்கள். இரண்டாவது செஷன் முடிவில் பங்களாதேஷ அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 112 ரன்கள் எடுத்தது.
முடிவுக்கு வந்த பங்களாதேஷ் முதல் இன்னிங்ஸ்
இதைத்தொடர்ந்து பங்களாதேஷ் அணி மூன்றாவது செஷனில் விளையாடியது. தொடர்ந்து பந்து வீசிய பும்ரா டஸ்கின் அகமது விக்கட்டை கைப்பற்றுவதற்கு தொடர்ந்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டே இருந்தார். கடைசியில் ஷார்ட் லெக் பீல்டரை கொண்டு வந்து, அத்தோடு தொடர்ந்து மூன்று பந்துகளை இடுப்புக்கு அனுப்பி, நான்காவது பந்தை யார்க்கராக எடுத்து கிளீன் போல்ட் செய்து வெளியே அனுப்பினார். அவரது பந்துவீச்சை பார்க்க அவ்வளவு சிறப்பாக அமைந்திருந்தது.
இதையும் படிங்க : ரோகித் களத்தில் செய்த மாஸ்டர் மூவ்.. பங்களாதேஷ் அணி பேச்சுக்கு சிறப்பான பதிலடி.. முன்னிலையில் இந்திய அணி
இந்த நிலையில் இறுதியாக பங்களாதேஷ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 47.1 ஒன்று ஓவரில் 149 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மெகதி ஹசன் மிராஸ் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். இந்திய அணியின் தரப்பில் பும்ரா நான்கு, சிராஜ் ஜடேஜா மற்றும் ஆகாஷ் தீப் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். மேலும் இந்த போட்டியில் பும்ரா ஒட்டுமொத்தமாக சேர்த்து சர்வதேச கிரிக்கெட்டில் 400 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் நுழைந்தார்.