தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி பெரும் 42 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அவர்களது ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி நேற்று டர்பன் கிங்ஸ்மீட் மைதானத்தில் துவங்கியது.
தடுமாறிய தென் ஆப்பிரிக்கா
இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் எய்டன் மார்க்ரம் 9, டோனி டி சோர்ஸி 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். அடுத்து வந்த ஸ்டப்ஸ் 16, பெடிங்ஹாம் 4, வெரினினே 9, வியான் முல்டர் 9, மார்க்கோ யான்சென் 13 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.
தென் ஆப்பிரிக்கா அணிக்கு கேப்டன் டெம்பா பவுமா மட்டுமே தாக்குப் பிடித்து விளையாடி 117 பந்துகளில் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 70 ரன்கள் எடுத்தார். கேசவ் மகாராஜ் கடைசி கட்டத்தில் 35 பந்தில் 20 ரன்கள் எடுத்தார். இறுதியாக தென் ஆப்பிரிக்க அணி 49.4 ஓவரில் 191 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இலங்கை பந்துவீச்சில் அஷிதா பெர்னாடோ மற்றும் லகிரு குமாரா தலா மூன்று விக்கெட் கைப்பற்றினார்கள்.
மோசமாக சுருண்ட இலங்கை அணி
இதைத்தொடர்ந்து விளையாட வந்த இலங்கை அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக காத்திருந்தது. அந்த அணி மொத்தம் 13.5 ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்து வெறும் 42 ரன்னில் ஆல் அவுட் ஆனது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கமிந்து மெண்டிஸ் 13 ரன்கள் எடுத்தார். கடைசியில் லகிரு குமாரா 10 ரன் எடுத்தார். இல்லையென்றால் இன்னும் மோசமாக ஆல் அவுட் ஆகி இருக்கும்.
தென் ஆப்பிரிக்க பந்துவீச்சில் மார்க்கோ யான்சென் 6.5 ஓவர்கள் பந்து வீசி 13 ரன்கள் தந்து 7 விக்கெட் கைப்பற்றினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இலங்கை அணிக்கு இது மிகக் குறைந்த ரன்னாக பதிவாகியது. இதற்கு முன்பு கண்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக 71 ரன்னுக்கு ஆல் அவுட் ஆகியிருந்தது.
இதையும் படிங்க : நான் சிஎஸ்கேவை எதிர்த்தது இதற்காகத்தான்.. வெஸ்ட் இண்டீஸ்காக செய்யட்டும் தப்பில்லை – ராபின் உத்தப்பா கருத்து
மேலும் சவுத் ஆப்பிரிக்காவில் குறைந்த ரன்னில் ஆல் அவுட் ஆன அணியாக மாறி இருக்கிறது. இதற்கு முன்பு நியூசிலாந்து கேப்டன் மைதானத்தில் 2013 ஆம் ஆண்டு 45 ரன்னில் சுருண்டு இருந்தது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் யான்செனுக்கு தனிப்பட்ட முறையில் சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. மேலும் இரண்டாவது சிறந்த தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் பந்துவீச்சாகவும் இது இடம் பிடித்தது. முதல் இடத்தில் இலங்கை அணிக்கு எதிராக ஒரு இன்னிங்ஸில் கேசவ் மகாராஜ் 9 விக்கெட் கைப்பற்றியது இருக்கிறது.






