ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க ஜோடி ஜெய்ஸ்வால் மற்றும் கேஎல்.ராகுல் ஆஸ்திரேலியா மண்ணில் புதிய சாதனை படைத்து இந்திய அணியை பெரிய முன்னிலையில் வைத்திருக்கிறார்கள்.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 150 ரன்கள் மட்டும் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் தரப்பில் அறிமுகவீரர் நிதிஷ் குமார் அதிகபட்சமாக 41 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய பந்துவீச்சில் ஜோஸ் ஹேசில்வுட் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியாவை வீழ்த்திய பாஸ்ட் பவுலிங் யூனிட்
இதைத்தொடர்ந்து பேட்டிங் செய்ய வந்த ஆஸ்திரேலியா அணி நேற்று முதல் நாள் முடிவில் 67 ரன்கள் எடுத்து ஏழு விக்கெட்டுகளை இழந்திருந்தது. இன்று தொடர்ந்து விளையாடிய ஆஸ்திரேலியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மிட்சல் ஸ்டார்க் 26 ரன்கள் எடுத்தார்.
இந்திய அணியின் தரப்பில் சிறப்பாக பந்துவீச்சை வெளிப்படுத்திய கேப்டன் பும்ரா ஐந்து விக்கெட்டை கைப்பற்றினார். அறிமுக வீரர் ஹர்சி தானா மூன்று மற்றும் முகமது சிராஜ் இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள். ஆஸ்திரேலியாவின் மொத்த பத்து விக்கெட்டையும் இந்திய அணியின் ஃபாஸ்ட் பௌலிங் யூனிட் கைப்பற்றியது.
இந்திய தொடக்க ஜோடி சாதனை
இதைத் தொடர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் 193 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 90* ரன், கேஎல்.ராகுல் 153 பந்துகளில் 4 பவுண்டரிகள் உடன் 63* ரன்கள் என ஆட்டம் இழக்காமல் களத்தில் நிற்கிறார்கள். இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் விக்கெட் இழப்பில்லாமல் இரண்டாவது இன்னிங்ஸில் 172 ரன்கள் எடுத்திருக்கிறது. மேலும் 218 ரன்கள் முன்னிலை பெற்று இருக்கிறது.
இன்று இவர்கள் இருவரும் 44 ஓவர்கள் தாண்டி விளையாடிய பொழுது ஆஸ்திரேலியா மண்ணில் அதிக ஓவர்கள் நின்று விளையாடிய இந்திய தொடக்க ஜோடி என்ற சாதனையை படைத்தார்கள். மேலும் 20 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் நூறு ரன்கள் தாண்டி பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடியாக இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: 16 வருட சிறப்பு.. கம்பீர் சாதனையை உடைத்த ஜெய்ஸ்வால்.. ஆஸியில் அமர்க்கள பேட்டிங்.. புது வரலாறு
இத்தோடு 1986 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆஸ்திரேலியா மண்ணில் இரண்டு தொடக்க ஆட்டக்காரர்களும் அரைசதம் அடித்த நிகழ்வு நடந்திருக்கிறது. மேலும் ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு கிரிக்கெட் காலண்டர் வருடத்தில் 34 சிக்ஸர்கள் அடித்து மெக்கலம் சாதனையை உடைத்து புது சாதனை படைத்திருக்கிறார்






