இந்த ஆண்டு இரானி கோப்பை தொடரில் ரகானே தலைமையிலான மும்பை மாநில அணி ருதுராஜ் தலைமையிலான ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு எதிராக இரண்டு நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 536 ரன்கள் குவித்திருக்கிறது.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ரஞ்சி டெஸ்ட் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணியும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணியும் மோதிக் கொள்ளும் இரானி கோப்பை நடைபெறும். இந்த ஆண்டு அந்த வகையில் ரஞ்சி சாம்பியன் மும்பை அணியும் ரெஸ்ட் ஆப் இந்தியா அணியும் மோதி வருகின்றன.
ரெஸ்ட் ஆப் இந்தியா அணி
ரெஸ்ட் ஆப் இந்தியா அணிக்கு ருதுராஜ் கேப்டனாக இருக்கிறார். இந்திய அணிக்காக விளையாடி இருக்கும் இஷான் கிஷான், தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரல், சாய் சுதர்சன், முகேஷ் குமார், பிரசித் கிருஷ்ணா மற்றும் யாஸ் தயால் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.
மும்பை மாநில அணியில் ரகானே ஸ்ரேயாஸ் ஐயர், சர்பராஸ் கான், பிரிதிவி ஷா, சர்துல் தாகூர் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள். இந்த போட்டியில் டாஸ் வென்ற ரெஸ்ட் ஆப் இந்தியா அணியின் கேப்டன் ருதுராஜ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
சர்பராஸ் கான் சாதனை இரட்டை சதம்
நேற்று முதல் நாளில் மும்பை அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்திருந்தது. ஸ்ரேயாஸ் அய்யர் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்திருந்தார். இதைத் தொடர்ந்து இன்று இரண்டாவது நாளில் விளையாடிய கேப்டன் ரகானே 97 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் சுழல் பந்துவீச்சு ஆல் ரவுண்டர் தனுஷ் கோட்டியன் 61 ரன்கள் எடுத்தார்.
இதையும் படிங்க: 52 வருட சாதனையை உடைத்து.. சர்பராஸ் கான் இரட்டை சதம்.. ருதுராஜ் அணிக்கு நெருக்கடி.. 2024 இரானி கோப்பை
இந்த நிலையில் பேட்டிங் வரிசையில் ஆறாவதாக வந்த சர்பராஸ் கான் இரண்டாம் நாள் முடிவில் ஆட்டம் இழக்காமல் 276 பந்துகளில் 25 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் உடன் 221 ரன்கள் எடுத்திருக்கிறார். இராணி கோப்பை வரலாற்றில் மும்பை வீரரின் அதிகபட்ச ரன்னாக இது பதிவாகி இருக்கிறது. இரண்டாம் நாள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 536 ரன்கள் குவித்து இருக்கிறது. முகேஷ் குமார் 4 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.