“இந்தியா பாணியில்.. ஆஸ்திரேலியாவை விட மாட்டோம்.. எங்களால சீரிஸ் அடிக்க முடியும்!” – முகமது ஹபீஸ் சவால்!

0
552
Hafeez

ஆஸ்திரேலியா இந்த வருட கிறிஸ்துமஸ் மாதத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக உள்நாட்டில் மூன்று போட்டிகள் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தீ போன்ற வேகத்துக்கு கிரிக்கெட்டில் உலகம் முழுவதும் புகழ்பெற்ற பெர்த் மைதானத்தில் சில நாட்களுக்கு முன்பு துவங்கி நடைபெற்றது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்ஸில் 487 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.

பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் தாக்குபிடித்து 271 ரன்கள் சேர்த்தது. ஆனால் தனது இரண்டாவது இன்னிங்ஸில் 89 ரன்கள் எடுத்து சுருண்டு 360 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. மேலும் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் எடுத்த ஸ்கோரை கூட இரண்டு இன்னிங்ஸிலும் பாகிஸ்தான் எடுக்கவில்லை.

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் அரை இறுதிக்கு தகுதி பெற முடியாமல் பாகிஸ்தான் வெளியேறியது பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பெரிய புயலை உருவாக்கியது.

- Advertisement -

இதன் காரணமாக கேப்டன் பொறுப்பில் இருந்த பாபர் அசாம் முற்றிலுமாக விலகிக் கொண்டார். இந்த நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் அணிக்கு ஷான் மசூத் மற்றும் வெள்ளைப் பந்து கிரிக்கெட் அணிகளுக்கு ஷாகின் அப்ரிடி கேப்டன்களாக கொண்டுவரப்பட்டார்கள்.

பாகிஸ்தான் அணியின் டீம் டைரக்டராக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் முகமது ஹபீஸ் மற்றும் பாகிஸ்தான் தேர்வுக்குழுவின் தலைமை பொறுப்பில் வகாப் ரியாஸ் ஆகியோர் கொண்டுவரப்பட்டார்கள்.

இந்தியா கடந்த ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தில் முதல் போட்டியில் தோற்று பின்பு தொடரை வென்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதே பாணியில் தற்பொழுது பாகிஸ்தான் அணியும் வெல்ல முடியும் என்று முகமது ஹபீஸ் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

இந்த நிலையில் தோல்விக்கு பின் பேசி உள்ள பாகிஸ்தான் அணியின் இயக்குனர் முகமது ஹபீஸ் கூறும் பொழுது “எங்களுடைய வீரர்கள் திறமையானவர்கள். இங்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர்கள் பயிற்சி போட்டிகளில் விளையாடிய விதத்தில் அவர்கள் எவ்வளவுதிறமையானவர்கள் என்பதை நான் அறிவேன். ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவை எங்களால் வீழ்த்த முடியும். எங்களால் எங்கள் திட்டங்களைப் பின்பற்ற முடியாமல் போய்விட்டது.

ஆனால் நான் எனது வீரர்களை இன்னும் நம்புகிறேன். பாகிஸ்தானால் ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்ல முடியும். ஆனால் நாங்கள் எங்கள் திட்டங்களை செயல்படுத்துவதில் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும்.

நாங்கள் ஆஸ்திரேலியாவுக்கான திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால் அதற்கு ஏற்ப விளையாடத் தவறிவிட்டோம். சில சமயங்களில் ஆஸ்திரேலியாவை பின்னுக்கு தள்ளினோம். நாங்கள் கடுமையாக விளையாட தயாராகி விட்டோம். ஆனால் எங்கள் செயல் திறன் சரியாக இல்லை” என்று கூறி இருக்கிறார்!