அணியில் ஜடேஜா இருக்கிறார். ஆகையால் நான் அடிக்கடி இதுபோன்று பவுலிங் செய்யப்போவதில்லை என்று பேசியுள்ளார் மொயின் அலி.
2023 ஐபிஎல் தொடரின் ஆறாவது லீக் போட்டியில் சிஎஸ்கே மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் கேஎல் ராகுல் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
சிஎஸ்கே அணிக்கு ருத்துராஜ் மற்றும் டெவான் கான்வே இருவரும் ஓபனிங் செய்தனர். முதல் ஓவரில் சற்று நிதானம் காட்டிய இந்த ஜோடி, அடுத்த ஓவரில் இருந்து வானவேடிக்கை காட்டி பவர் பிளே ஓவர்களில் 79 ரன்கள் குவித்து புதிய சாதனையை படைத்தது.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 110 ரன்கள் சேர்த்தது. டெவான் கான்வே 47 ரன்கள், ருத்துராஜ் 57 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த தூபே 27 ரன்கள், மொயின் அலி 19 ரன்கள் அடித்து ஆட்டம் இழந்தனர்.
இறுதியாக ராயுடு 14 பந்துகளில் 27 ரன்கள் அடித்தார். தோனி 3 பந்துகளில் 2 சிக்ஸர்கள் அடித்து 12 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். 20 ஓவர்களில் சிஎஸ்கே அணி 217/7 ரன்கள் குவித்தது.
இந்த இலக்கை சேஸ் செய்த லக்னோ அணியும் முதல் ஓவரிலிருந்து வெளுத்து வாங்கியது. கேஎல் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தனர். கைல் மேயர்ஸ் 53 ரன்கள் அடித்து மொயின் அலி பந்தில் அவுட்டானார்.
கேஎல் ராகுல் 20 ரன்கள், ஸ்டாயினிஷ் 21 ரன்கள், க்ருனால் பாண்டியா 9 ரன்கள் ஆகியோரும் மொயின் அலி பந்தில் அவுட் ஆகினர். அதிரடியாக விளையாடி வந்த நிக்கோலஸ் பூரன் 32 ரன்கள் அடித்து வெளியேறினார். ஆயுஸ் பதோனி 23 ரன்கள் அடித்தார்.
கடைசியாக ஜோடி சேர்ந்த கிருஷ்ணப்பா கௌதம்(17) மற்றும் மார்க் வுட்(10) இருவரும் லக்னோ அணி 200 ரன்கள் கடக்க உதவினர். 20 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. 12 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றது.
டாப் 5 பேட்ஸ்மேன்களில் நான்கு பேரின் விக்கெட்டை தூக்கிய மொயின் அலி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் சிறந்த பங்களிப்பை கொடுத்ததால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர்,
” நான் இந்த தொடர் முழுவதும் பந்து வீசப்போவதில்லை. அணியில் ஜடேஜா இருக்கிறார். அவர்தான் முதன்மை ஸ்பின்னர். மகேந்திர சிங் தோனிக்கு எப்போது யாரை பயன்படுத்த வேண்டும் என்பது நன்றாக தெரியும். அதனால் தான் இன்றைய போட்டியில் என்னை முன்னரே பயன்படுத்தினார்.
சான்ட்னர் ஒரு பக்கம் நல்ல அழுத்தம் கொடுத்ததால் தான் என்னால் விக்கெட் எடுக்க முடிந்தது. லக்னோ அணியில் மிகப்பெரிய சிக்ஸர்கள் அடிக்கக்கூடிய வீரர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டில் பந்து வீசுவது போல வீசினேன். அதுதான் எனது ஒரே பிளான். நன்றாக எடுபட்டதில் மகிழ்ச்சி.” என்று மொயின் அலி பேசினார்.






