கடந்த வருடம் யு.ஏ.இ-யில் நடந்த டி20 உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி முதல் சுற்றோடு வெளியேறி அதிர்ச்சி அளித்திருந்தது. இது கிரிக்கெட் விமர்சகர்கள், இரசிகர்கள் என எல்லா மட்டத்திலும் விமர்சனத்தை உருவாக்கி இருந்தது. இதனால் இந்த வருடம் செப்டம்பரில் ஆஸ்திரேலியாவில் நடக்க உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான சரியான இந்திய அணியை உருவாக்க இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் பெரிய முயற்சிகளை எடுத்து வருகிறது. மேலும் ரோகித் சர்மா தலைமையில் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் தைரியமான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது!
ஐ.பி.எல் தொடர் முடிந்து முன்னணி நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு, இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் ருதுராஜ், இஷான் கிஷான், அர்ஸ்தீப் சிங், உம்ரான் மாலிக் போன்ற வீரர்கள் வாய்ப்பு பெற்றனர். ஆனால் சஞ்சு சாம்சன், ராகுல் திரிபாதி போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களுக்கு டி20 கிரிக்கெட் வடிவத்தில் இந்திய அணியில் தொடர் வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை. இது பல கிரிக்கெட் இரசிகர்களிடம் அதிருப்தியையும் விமர்சனத்தையும் உண்டாக்கி வருகிறது. குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் டெக்னிக்கில் சில பிரச்சினைகளை வைத்திருக்கும் ஸ்ரேயாஷ் ஐயருக்குத் தொடர் வாய்ப்புகள் கிடைப்பது முணுமுணுப்பை உருவாக்கி இருக்கிறது.
இந்திய அணி இப்போது டி20 பார்மட்டில் பேட்டிங்கில் தைரியமான அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது. இந்த முறைக்கு ஸ்ரேயாஷ் ஐயரை விட சஞ்சு சாம்சன் மிகப் பொருத்தமாக இருப்பார் என்று முன்னாள் வீரர்கள், இரசிகர்கள் கருதுகிறார்கள். ஆனால் இந்திய அணி நிர்வாகம் ஸ்ரேயாஷ் ஐயருக்கே அதிகப்படியான வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்த முறை ஐ.பி.எல் தொடரில் கேப்டனாய் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இறுதிபோட்டி வரை அழைத்துச் சென்ற சஞ்சு சாம்சனுக்கு ஒரே ஒரு டி20 போட்டியில் மட்டுமே விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த ஒரு வாய்ப்பில் அவர் அரைசதம் அடித்தும் அடுத்த வாய்ப்புகள் அவருக்கு வழங்கப்படவில்லை.
இந்திய விக்கெட் கீப்பர்களின் கடைசி மூன்று டி20 இன்னிங்ஸ் ரன்கள்
ரிஷாப் பண்ட் – 1, 26, 1
தினேஷ் கார்த்திக் – 11, 12, 6
இஷான் கிஷான் – 26, 3, 8
சஞ்சு சாம்சன் – 39, 18, 77
இந்த நிலையில் 1997ஆம் வருடம் இந்திய அணிக்காக நான்கு டெஸ்ட் போட்டிகளிலும், ஒரு ஒருநாள் போட்டியிலும் விளையாடியுள்ள கர்நாடக வேகப்பந்துவீச்சாளர் டோட்டா கணேஷ் முக்கியமான தனது ஒரு கருத்தை ட்வீட் செய்திருக்கிறார். அதில் அவர் “டி20 கிரிக்கெட் வடிவத்தில் எல்லாரும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்கள் விளையாடுவதைத்தான் விரும்புவார்கள். ஆனால் அவரை ஸ்ரேயாஷ் ஐயருக்காக புறக்கணிப்பது, எந்தவகையிலும் கிரிக்கெட் நியாயம் இல்லை” என்று தெரிவித்து பரபரப்பை கிளம்பி இருக்கிறார். சமீபத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த பிரபல முன்னாள் இந்திய வீரர் வெங்கடேஷ் பிரசாத்தும் ஸ்ரேயாஷ் ஐயரின் டி20 இடம் குறித்துக் கேள்வி எழுப்பி இருந்தார்!
Ideally, you would want to players like Sanju Samson in the T20s. Ignoring him for Shreyas Iyer is beyond cricketing rationale #DoddaMathu #CricketTwitter #WIvIND
— ದೊಡ್ಡ ಗಣೇಶ್ | Dodda Ganesh (@doddaganesha) July 14, 2022