நடப்பு சாம்பியன் டிராபியில் விராட் கோலி ஒரு போட்டியில் இன்னும் ஒரு 50 ரன்கள் எடுத்தால், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் யாரும் செய்யாத சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் பேட்டிங் ஃபார்ம் இல்லாமல் தவித்த விராட் கோலி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அரை சதம் அடித்தார். இதைத்தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான முக்கிய போட்டியில் சதம் அடித்து திரும்பி வந்திருக்கிறார்.
விராட் கோலிக்கு கொடுக்கப்பட்டிருக்கும் ரோல்
தற்போது இந்திய அணி துபாய் சர்வதேச மைதானத்தில் தனது அனைத்து சாம்பியன்ஸ் டிராபி போட்டிகளையும் விளையாடுகிறது. இந்த மைதானத்தின் ஆடுகளம் மிகவும் மெதுவாக காணப்படுகிறது. எனவே இங்கு சுழல் பந்துவீச்சுக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினமாக பேட்ஸ்மேன்களுக்கு அமைகிறது.
இதன் காரணமாக மிடில் ஓவர்களில் விராட் கோலி சுழல் பந்து வீச்சில் எந்த ரிஸ்க்கும் எடுக்காமல் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்து ஆட்டத்தை எடுத்துக்கொண்டு செல்ல வேண்டும் என புதிய ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவரும் இதன்படியே பாகிஸ்தான் அணிக்கு எதிராக சுழல் பந்துவீச்சை பெரிதான முறையில் அடித்து விளையாடாமல் ஒன்று இரண்டு ரன்கள் எடுத்து நகர்த்தி விளையாடி சதமும் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார்.
விராட் கோலி படைக்கு இருக்கும் புதிய சாதனை
தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடர் வரலாற்றில் இந்திய வீரர் ஷிகர் தவான் தலா மூன்று அரை சதங்கள் மற்றும் மூன்று சதங்கள் என ஆறு முறைக்கு மேல் 50 ரன்கள் தாண்டி எடுத்து, இந்த வகையில் முதல் இடத்தில் இருக்கிறார். இதைத்தொடர்ந்து சௌரவ் கங்குலி தலா மூன்று அரை சதங்கள் மற்றும் மூன்று சதங்கள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ராகுல் டிராவிட் ஆறு அரை சதங்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
இதையும் படிங்க : ஆப்கானுக்கு மென்டரான யூனிஸ் கான்.. பாகிஸ்தானுக்கு வேலை செய்ய வரல.. காரணம் இதான் – ரஷீத் லத்திப் பேட்டி
தற்போது விராட் கோலி சாம்பியன் டிராபி வரலாற்றில் 50 ரன்களுக்கு மேல் ஆறு முறை எடுத்திருக்கிறார். இதில் ஒரு சதம் மற்றும் ஐந்து அரை சதங்கள் அடக்கம். தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபியில் இன்னும் ஒரு அரை சதம் எடுத்தால், சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் அதிக முறை 50 ரன்கள் தாண்டி எடுத்த வீரர் என்கின்ற மெகா சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டதால் இன்னும் இரண்டு போட்டிகள் இந்திய அணி உறுதியாக விளையாடும். எனவே இரண்டு போட்டிகளில் விராட் கோலி இந்த புதிய சாதனையை படைப்பாரா? என்று பார்க்க வேண்டும்!






