இந்தியா உலககோப்பையை வெல்லவில்லை என்றால் அதற்கு இதுதான் முக்கிய காரணமாக இருக்கும் என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
டி20 உலக கோப்பை தொடரில் நன்றாக செயல்படுவதற்காக மூன்று வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா சென்றுவிட்டது இந்திய அணி. மொத்தம் நான்கு பயிற்சி ஆட்டங்களில் விளையாட திட்டமிடப்பட்டது. மூன்று பயிற்சி ஆட்டங்கள் முடிவில் இரண்டில் வெற்றி பெற்றுள்ளது. 4வது பயிற்சி ஆட்டம் நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று துவங்க உள்ளது.
ஆஸ்திரேலியா புறப்பட்டு வருவதற்கு முன்பு இந்தியா ஆறு டி20 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளை கைப்பற்றியது. தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று வரும் இந்திய அணி நம்பிக்கையுடன் உலக கோப்பையில் களமிறங்க உள்ளது. முதல் போட்டியில் பலம்மிக்க பாகிஸ்தான் அணியை 23ஆம் தேதி மெல்பர்ன் மைதானத்தில் மோதுகின்றன.
இளம் வீரர்கள் போதிய அளவில் பயிற்சிகளை பெற்றிருக்கின்றனர். ஆஸ்திரேலிய மைதானம் அதுவரை அவர்களுக்கு பழக்கப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது பயிற்சி ஆட்டத்திற்கு பின்பு நல்ல மனநிலையுடன் காணப்படுகின்றனர்.
நன்கு பயிற்சி பெற்றிருக்கும் இந்திய அணி நிச்சயம் இந்த உலக கோப்பையை கைப்பற்றும் என பலரும் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், ‘உலகக் கோப்பையை இந்திய அணி தவற விடுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கு காரணம் இதுவாகத்தான் இருக்க முடியும்.’ என்று தனது கணிப்பில் தெரிவித்திருக்கிறார் சுனில் கவாஸ்கர்.
அவர் கூறியதாவது: இந்திய அணி உலக கோப்பை இழந்தால் அதற்கு பயிற்சி குறைபாடு காரணமாக இருக்காது. ஏனெனில் மூன்று வாரங்களுக்கு முன்பு ஆஸ்திரேலியா சென்று இளம் வீரர்களும் தீவிர பயிற்சியை எடுத்துக் கொண்டனர். அதற்கு முன்னர் நடைபெற்ற டி20 தொடர்களையும் கைப்பற்றி விட்டனர்.
‘நீ பயிற்சிக்கு தயாராகவில்லை என்றால் தோல்விக்கு தயாராகிறாய்’ என்ற பழமொழி இந்திய அணிக்கு இம்முறை பொருந்தாது. அந்த அளவிற்கு பயிற்சிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
ஆனால் இந்திய அணி கோப்பை இழப்பதற்கு முக்கிய காரணமாக இருப்பது அணி வீரர்கள் மத்தியில் நிலவும் ஒற்றுமை தான். ஒருவரை மற்றொருவர் புரிந்து கொள்வதில் சிக்கல் இருக்கிறது. சிலர் அதிக அனுபவம் மிக்க வீரர்களாக இருக்கின்றனர். சிலர் மிகுந்த இளம் வீரர்களாக இருக்கின்றனர். இந்த நிலை நீடிப்பதால் இந்திய அணி வீரர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை. ஒருவேளை தோற்கும் பட்சத்தில் இதுதான் காரணமாக இருக்க முடியும். என்றார்.