சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை தென்னாப்பிரிக்க அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலமாக இந்திய அணி தனது அரை இறுதி ஆட்டத்தை நாளை நடைபெறும் போட்டியின் மூலமாக முடிவு செய்ய உள்ளது.
இங்கிலாந்து அணி தோல்வி
கராச்சியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். ஏற்கனவே இங்கிலாந்து அணி தொடரை விட்டு வெளியேறிய நிலையில், தனது கேப்டன் பதவியை விட்டு விலகுவதாக ஜாஸ்பட்லர் அறிவித்திருக்கிறார். எனவே தனது கடைசி ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணியை வழிநடத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் 38.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 178 ரன்கள் குவித்தது.
இங்கிலாந்து அணியை பொறுத்தவரை அதிகபட்சமாக ஜோ ரூட் 44 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார். கேப்டன் ஜாஸ் பட்லர் 21 ரன்கள் ஆட்டம் இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தென் ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை பந்துவீச்சில் மேர்கோ ஜான்சன் மற்றும் மல்டர் ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள். இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது.
இந்திய அணிக்கு காத்திருக்கும் சவால்
தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய ஸ்டெப்ஸ் டக் அவுட் ஆகி வெளியேற, ரிக்கல்டன் மற்றும் வாண்டர் டசன் ஆதியோர் நிலைத்து நின்று தென்னாப்பிரிக்க அணியின் ரன்களை உயர்த்தினார்கள். இதில் ரிக்கல்டன் 27 ரன்கள் எடுத்து வெளியேற மூன்றாவது வரிசை ஆட்டக்காரரான வாண்டர் டசன் 86 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். அவரோடு பார்ட்னர்ஷிப் அமைத்த விக்கெட் கீப்பர் க்ளாசன் 56 பந்துகளில் 11 பவுண்டரிகளோடு 64 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார். இறுதியில் டேவிட் மில்லர் சிக்சர் அடித்து ஆட்டத்தை முடிக்க தென்னாபிரிக்க அணி 29.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 181 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது.
இதையும் படிங்க:ஐசிசியின் இந்த 2 விதிகள் மோசம்.. இந்திய அணியின் சுழல் ஆதிக்கத்தையே அழிச்சிடும் – அஸ்வின் பேட்டி
இதன் மூலமாக இந்த தொடரில் மூன்று போட்டிகளிலும் தோற்று வெளியேறிய அணியாக இங்கிலாந்து அணி சோகமாக இந்தத் தொடரை முடிக்கிறது. நாளை நடைபெறவுள்ள இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி ஆஸ்திரேலியா அணிக்கு எதிராகவும் தோல்வியடையும் அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிராகவும் அரையிறுதி ஆட்டங்களில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்திய அணி நாளைய போட்டியில் வெற்றி பெற்றால் தனது அரை இறுதி ஆட்டத்தை ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக விளையாடும்.






