தோல்வியே சந்திக்காமல் உலகக்கோப்பைக்கு தகுதி… இலங்கை அணி அபாரம்…. வான்கடே மைதானத்தில் மீண்டும் இந்தியா-இலங்கை போட்டி!

0
549

உலகக்கோப்பை குவாலிபயரில் சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளது இலங்கை அணி. வான்கடே மைதானத்தில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுவதும் உறுதியாகியுள்ளது.

ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை குவாலிபயர் போட்டிகள் சூப்பர் சிக்ஸ் சுற்றுக்கு முன்னேறியது. அதில் இன்று இலங்கை மற்றும் ஜிம்பாப்வே இரு அணிகளும் மோதின. இதில் வெற்றி பெறும் அணி முதல் அணியாக உலகக்கோப்பைக்கு தகுதி பெறும் என்று இருந்தது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணிக்கு சீன் வில்லியம்சன் 56 ரன்கள், சிக்கந்தர் ராசா 31 ரன்கள் அடித்தனர். மற்ற வீரர்கள் பெரிதளவில் சோபிக்கவில்லை. இதனால் 32.2 ஓவர்களில் 165 ரன்கள் மட்டுமே அடித்து ஜிம்பாப்வே அணி ஆல் அவுட் ஆனது.

ஜிம்பாப்வே அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொண்ட இலங்கை அணி 166 ரன்கள் இலக்கை துரத்த களமிறங்கியது. இலங்கை அணி துவக்க வீரர்கள் நிசங்கா மற்றும் கருநரத்தினே இருவரும் முதல் விக்கெட்டிற்கு 103 ரன்கள் சேர்த்து வலுவான துவக்கம் அமைத்தனர்.

கருணரத்தினே 30 ரன்களுக்கு அவுட் ஆனார். அடுத்து உள்ளே வந்த குஷால் மெண்டிஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 25 ரன்கள் அடித்தார். மற்றொரு துவக்க வீரர் நிசங்கா அபாரமாக விளையாடி சதம் விலாசினார். இவரும் இறுதிவரை ஆட்டமிழக்கவில்லை. 102 பந்துகளில் 14 பவுண்டர்கள் உட்பட 101 ரன்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

33.1 ஓவரில் இலக்கை எட்டிய இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் உலகக்கோப்பைக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. குவாலிஃபயர் சூப்பர் 6 சுற்றில் முதல் இடம் பிடித்ததால் நவம்பர் 2ஆம் தேதி நடைபெறும் இந்திய அணிக்கு எதிரான போட்டியிலும் மோதுகிறது.

கடந்த முறை இந்தியாவில் நடந்த உலகக்கோப்பையில் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற பைனலில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதின. அதன் பிறகு மீண்டும் உலகக்கோப்பையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் போட்டி நடைபெறுகிறது.