இந்திய மகளிர் அணியின் தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல் 2025 மகளிர் உலகக் கோப்பையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் குரூப் சுற்றில் பங்களாதேஷுக்கு எதிரான போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் போனது.
இருப்பினும், இந்தியா வரலாறு படைத்து, இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்க மகளிரை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் முறையாக உலகக் கோப்பை கோப்பையை கைப்பற்றியது. ராவல் காயம் காரணமாக ஷஃபாலி வர்மாவால் மாற்றப்பட்டதால், ICC விதிமுறைகளின்படி வெற்றியாளர் பதக்கம் கிடைக்கவில்லை.
அந்த விதிகள் இறுதி அணியில் உள்ள வீரர்களுக்கு மட்டுமே பதக்கம் வழங்கப்படும் என கூறுகின்றன. இருப்பினும், தற்போதைய செய்திகளின்படி ICC தலைவர் ஜெய் ஷா ராவலுக்கு அவரது பங்களிப்பை அங்கீகரித்து பதக்கம் கிடைக்க ஏற்பாடு செய்து வருகிறார்.
பிரதிகா ராவல் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது பதக்கம் அணிந்திருந்தார். ஆனால் அது தனது சொந்த பதக்கம் இல்லை, அணி ஊழியர் ஒருவரின் பதக்கம் என அவர் பின்னர் தெளிவுபடுத்தினார். காயம் அடைந்த போதிலும், ராவலின் ஆட்டம் அசாதாரணமானது. அவர் ஒரு சதம் மற்றும் அரைசதம் உட்பட 308 ரன்கள் குவித்தார்.
இது குறித்து பேசிய பிரதிகா ராவல், “இதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. வாயில் இருந்து வார்த்தை வராது. என் தோளில் இருக்கும் இந்த கொடி எனக்கு அதிகம் அர்த்தம். என் அணியினருடன் இங்கு இருப்பது உண்மையிலேயே அற்புதம். நேர்மையாகச் சொல்வதானால், போட்டியை வெளியில் இருந்து பார்ப்பது மிகக் கடினமாக இருந்தது.
இதையும் படிங்க:இந்த ஒரு வீரரால் தான் இந்திய அணியில் பெரிய குழப்பமே.. கம்பீருக்கு கையிப் அறிவுரை
உள்ளே விளையாடுவது எளிது. வெளியில் பார்ப்பது கடினம். ஆனால் இந்த ஆற்றல், இந்த சூழல் எனக்கு நெஞ்சு படபடப்பை ஏற்படுத்தியது. விக்கெட் விழும் போதெல்லாம், சிக்ஸர் அடிக்கும் போதெல்லாம் ரசிகர்களின் ஆதரவு தெரிந்தது. அது அற்புதம்,” என்று ராவல் கூறினார். இனி இந்திய மகளிர் அணி அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுகிறது. இதற்கிடையில் மகளிர் பிரிமியர் லீக் தொடர் ஏலம் நடத்தப்பட உள்ளது.