இந்தியா பங்களாதேஷ் இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு பிறகு ஐசிசி வெளியிட்டுள்ள டெஸ்ட் ஐசிசி டெஸ்ட் ரேங்கிங் ரேங்க் பட்டியலில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா முதல் இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறார்.
தற்போது ஐசிசி வெளியிட்டு இருக்கும் டெஸ்ட் கிரிக்கெட் பேட்டிங் மற்றும் பந்துவீச்சுக்கான தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்களின் ஆதிக்கம் பெரிய அளவில் தொடர்ந்து வருகிறது. பேட்டிங்கில் குறிப்பாக இளம் வீரர் ஜெய்ஸ்வால் உச்சநிலையை எட்டி இருக்கிறார்.
ஜஸ்பிரித் பும்ரா முதலிடம்
ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 870 புள்ளிகள் உடன் முதல் இடத்தை பிடித்திருக்கிறார். காயத்திற்கு பிறகு மிகச் சிறப்பாக திரும்பி வந்திருக்கும் அவர் தனக்குப் பிடித்த கிரிக்கெட் வடிவத்தில் உச்சநிலையை அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் முதல் 10 இடங்களில் ரவிச்சந்திரன் அஸ்வின் 869 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா 809 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் இருக்கிறார். மொத்தம் மூன்று இந்திய பந்துவீச்சாளர்கள் முதல் 10 இடங்களில் இருக்கிறார்கள்.
ஜெய்ஸ்வால் விராட் கோலி முன்னேற்றம்
ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் 899 புள்ளிகள் உடன் முதல் இடத்தில் இருக்கிறார். பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மூன்று அரை சதங்கள் எடுத்த இந்திய துவக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் இரண்டு இடங்கள் முன்னேறி 792 புள்ளிகள் உடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார்.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 48 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்ஸில் ஆட்டம் இழக்காமல் இருந்த விராட் கோலி ஆறு இடங்கள் முன்னேறி 724 புள்ளிகள் உடன் ஆறாவது இடத்தில் இருக்கிறார். ரிஷப் பண்ட் மூன்று இடங்கள் சரிந்து 718 புள்ளிகள் உடன் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறார். இவர்கள் மூவரும் முதல் 10 இடங்களில் இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : விராட் கோலி ரவி சாஸ்திரிக்கு நன்றி உள்ளவனா இருக்கேன்.. ஒரு பிராமிஸ் பண்ணேன் – ரோகித் சர்மா ஓபன் பேட்டி
பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சரியாக விளையாடாத ரோகித் சர்மா ஐந்து இடங்கள் சரிந்து 693 புள்ளிகள் உடன் 15வது இடத்திலும், சுப்மன் கில் இரண்டு இடங்கள் சரிந்து 684 புள்ளிகள் உடன் 16வது இடத்திலும் இருக்கிறார்கள். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களான இவர்கள் இருவரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், ஐசிசி டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் ஐந்து இந்திய பேட்ஸ்மேன்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்பு உருவாகும்!