2026 ஆம் ஆண்டுக்கான ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரின் அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டது. இத்தொடரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 15 அன்று இலங்கையின் கொழும்பில் மோதுகின்றன. கடந்த ஆண்டு செப்டம்பரில் துபாயில் நடந்த ஆசியக் கோப்பை இறுதிப் போட்டிக்கு பிறகு இவ்விரு அணிகளும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.
அந்தப் போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்றது. கடந்த ஆண்டு ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தானை மூன்று முறை எதிர்கொண்டது.இந்தியா-பாகிஸ்தான் மோதும் இந்தப் போட்டி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளது. இது இந்திய அணிக்கு மூன்றாவது லீக் ஆட்டமாகும்.
இந்தியா விளையாடும் போட்டி:
நடப்பு சாம்பியனான இந்திய அணி, அமெரிக்கா, நெதர்லாந்து மற்றும் நமீபியாவுடன் குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ளது. இந்திய அணி, பிப்ரவரி 7 அன்று மும்பையில் அமெரிக்காவுக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தில் களமிறங்குகிறது.பிப்ரவரி 12 அன்று டெல்லியில் நமீபியாவையும், பிப்ரவரி 15 அன்று கொழும்பில் பாகிஸ்தானையும் இந்தியா எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து, பிப்ரவரி 18 அன்று அகமதாபாத்தில் நெதர்லாந்து அணியுடன் விளையாடுகிறது.
டி20 உலகக் கோப்பை தொடருக்காக மொத்தம் 8 மைதானங்களை பட்டியலிட்டுள்ளது. இந்தியாவிலிருந்து டெல்லி, அகமதாபாத், சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை மைதானங்களும், இலங்கையில் இருந்து கொழும்பில் உள்ள எஸ்எஸ்சி மற்றும் ஆர். பிரேமதாச மைதானம் மற்றும் பாலக்கல்லே மைதானத்திலும் போட்டி நடக்க உள்ளது. பாகிஸ்தான் தனது அனைத்து ஆட்டங்களையும் கொழும்பு மற்றும் பாலக்கல்லேவில் விளையாடும்.
போட்டி முறை:
20 அணிகள் தலா நான்கு அணிகள் கொண்ட ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் சூப்பர் எட்டு சுற்றுக்கு முன்னேறும். இந்த எட்டு அணிகள் தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு அணிகள் அரையிறுதிக்குச் செல்லும், அதைத் தொடர்ந்து இறுதிப் போட்டி நடைபெறும்.
இதையும் படிங்க: டாஸ் மீது பழியை போட்ட ஜடேஜா.. முதலில் பேட்டிங் செய்திருந்தால் நல்ல நிலையில் இருந்திருப்போம் என கருத்து
பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெற்றால், கொழும்பில் விளையாடும். இரண்டாவது அரையிறுதி மும்பையில் நடைபெறும். பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றால், கொழும்பில் இறுதிப் போட்டி நடைபெறும். இல்லையெனில், அது அகமதாபாத்தில் நடைபெறும்.இறுதிப் போட்டி மார்ச் 8 அன்று நடைபெறுகிறது, மார்ச் 9 ரிசர்வ் நாளாகும்.






