2025 ஆம் ஆண்டு இந்தியாவில் செப்டம்பர் 30 முதல் நவம்பர் 2 வரை நடைபெறவுள்ள மகளிர் உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை நான்கு மடங்கு உயர்த்துவதாக ஐசிசி அறிவித்துள்ளது.எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தத் தொடரின் மொத்த பரிசுத் தொகை 13.88 மில்லியன் டாலர்களாகும். இது 2022 ஆம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெற்ற முந்தைய தொடரின் 3.5 மில்லியன் டாலர்களிலிருந்து 297 சதவீத உயர்வாகும்.
இந்த மொத்த பரிசுத் தொகை, 2023 ஆம் ஆண்டு ICC ஆடவர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் 10 மில்லியன் டாலர் பரிசுத் தொகையை விட அதிகமாகும்.இந்தியாவில் கவுகாத்தி, இந்தூர், நவி மும்பை, விசாகப்பட்டினம் மற்றும் இலங்கையில் கொழும்பு ஆகிய ஐந்து இடங்களில் நடைபெறவுள்ள இந்த தொடரில் சாம்பியன் பட்டம் வெல்பவர்கள் 4.48 மில்லியன் டாலர்களைப் பெறுவார்கள்.
ஆண்களை விட அதிகம்:
இது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியா தனது ஏழாவது சாம்பியன் பட்டம் வென்றபோது பெற்ற 1.32 மில்லியன் டாலர்களிலிருந்து 239 சதவீத உயர்வாகும். கடந்த ஆடவர் உலகக் கோப்பையில் வெற்றியாளர்களின் பரிசுத் தொகை 4 மில்லியன் டாலர்களாக இருந்தது.பரிசுத் தொகையை உயர்த்தி இருப்பதன் மூலம், மகளிர் கிரிக்கெட்டை ஊக்குவிக்க ஐசிசி எடுத்த முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐசிசி தலைவர் ஜெய்ஷா, “இந்த அறிவிப்பு மகளிர் கிரிக்கெட்டின் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லை குறிக்கிறது. பரிசுத் தொகையில் இந்த நான்கு மடங்கு உயர்வு மகளிர் கிரிக்கெட்டுக்கு ஒரு முக்கிய தருணமாகும். மேலும் இதன் நீண்டகால வளர்ச்சிக்கு எங்கள் தெளிவான அர்ப்பணிப்பை காட்டுகிறது.”
ஜெய்ஷா கருத்து:
“எங்கள் செய்தி எளிது, மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் இந்த விளையாட்டை தொழில்முறையாக தேர்ந்தெடுத்தால், ஆண்களுக்கு இணையாக நடத்தப்படுவார்கள் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இந்த உயர்வு, உலகத் தரம் வாய்ந்த ICC மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையை வழங்குவதற்கும், அடுத்த தலைமுறை வீரர்கள் மற்றும் ரசிகர்களை ஊக்குவிப்பதற்குமான குளிக்கோள் ஆகும்.”
“மகளிர் கிரிக்கெட் வளர்ச்சி பாதையில் உள்ளது. மேலும் இந்த நடவடிக்கையால் இந்த வேகம் மேலும் அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். அனைத்து பங்குதாரர்கள், ரசிகர்கள், ஊடகங்கள் மகளிர் விளையாட்டை ஆதரிக்கவும், அதற்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைப்பதை உறுதி செய்யவும் எங்களுடன் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்,” என்று ஜெய்ஷா கூறினார்.
இதையும் படிங்க: கோலி, ரோகித்துக்கு முறையான பேர்வெல் வழங்க வேண்டும்.. பிசிசிஐக்கு இளம் வீரர் கோரிக்கை
இந்த முறை இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணி 2.24 மில்லியன் டாலர்களைப் பெறும். இது கடந்த முறை 2வது இடம் பிடித்த இங்கிலாந்து பெற்ற 600,000 டாலர்களுடன் ஒப்பிடும்போது 273 சதவீத உயர்வாகும். அரையிறுதியில் தோல்வியடையும் இரு அணிகள் தலா 1.12 மில்லியன் டாலர்களைப் பெறும். ஒவ்வொரு லீக் வெற்றிக்கும் 34,314 டாலர்களைப் பெறுவார்கள். ஐந்தாவது மற்றும் ஆறாவது இடங்களைப் பிடிக்கும் அணிகள் தலா 700,000 டாலர்களையும், ஏழாவது மற்றும் எட்டாவது இடங்களைப் பிடிக்கும் அணிகள் 280,000 டாலர்களையும் பெறும். ஒவ்வொரு பங்கேற்கும் அணிக்கும் 250,000 டாலர்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது.






