இந்திய கிரிக்கெட்டுக்கு பெரும் பங்களிப்பு செய்த விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோருக்கு பேர்வெல் வழங்கப்பட வேண்டும் என்று ரவி பிஸ்னாய் தெரிவித்துள்ளார். 2024 டி20 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இரு ஜாம்பவான்களும் டி20 சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றனர்.
பின்னர் டெஸ்ட் வடிவத்திலிருந்தும் ஓய்வு பெற்றதாக அறிவித்தனர்.தற்போது, கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகின்றனர். ஆனால் அவர்களின் எதிர்காலம் இந்த வடிவத்தில் நிச்சயமற்றதாக உள்ளது. அக்டோபரில் நடைபெறவுள்ள ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் அவர்களின் கடைசி சர்வதேசப் பயணமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பேர்வெல் வழங்க வேண்டும்:
பிசிசிஐ, பல இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கு முறையான பேர்வல் வழங்காததற்காக அடிக்கடி விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதில் ரோஹித் மற்றும் கோலியும் அடங்குவர். இது குறித்து பேசிய ரவி பிஸ்னாய், “இது உண்மையில் அதிர்ச்சியளிக்கிறது, ஏனென்றால் கோலி, ரோகித் மைதானத்தில் இருந்து ஓய்வு பெறுவதை நீங்கள் எப்போதும் விரும்புவீர்கள்.”
“இப்படிப்பட்ட பெரிய ஜாம்பவான்களுக்கு, மைதானத்தில் இருக்கும்போதே விடைபெறுவது மிகவும் அழகாக இருக்கும். இந்தியாவுக்காக அவர்கள் இருவரும் செய்தவை, என் பார்வையில், யாரும் அவர்களுக்கு அருகில் கூட வர முடியாது. அவர்களுக்கு நல்ல பேர்வல் போட்டி கிடைக்க வேண்டும். ஒருவேளை ஒருநாள் போட்டிகளிலும் அவர்களுக்கு அது கிடைக்கலாம்.”
அபிஷேக் சர்மா பெஸ்ட்:
“யாரும் உங்களுக்கு எப்போது ஓய்வு பெற வேண்டும் என்று சொல்ல முடியாது. ஆனால், இருவரும் ஓய்வு பெற்றது அதிர்ச்சியாக இருந்தது, ஏனென்றால் திடீரென இரண்டு இடங்கள் காலியாகிவிட்டன, அவற்றை யார் வந்து நிரப்புவார்கள்? தற்போது, அபிஷேக் சர்மா மிகவும் சிறப்பாக பேட்டிங் செய்கிறார். அவருக்கு எதிராக பந்து வீசும்போது, என்னிடமிருந்து ஏதோ கூடுதல் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று உணர்கிறேன்.”
“லெக்-ஸ்பின்னராக, அவர் என்னை மிகவும் நன்றாக விளையாடுவதாக உணர்கிறேன். அவர் ஆஃப்-சீசனில் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். இப்போதும் அவர் ஒவ்வொரு நாளும் முயற்சி செய்வதைப் பார்க்க முடிகிறது. அவர் பேட்டிங் செய்யும் விதத்தைப் பார்க்கும்போது, அவருக்கு எதிராக எப்படி மேம்படுத்தலாம் என்று எப்போதும் சிந்திக்கிறேன்.”
இதையும் படிங்க: ஆசிய சாம்பியன் இந்தியாவுக்கு இந்த முறை சிக்கல்.. ஆப்கான் வரையில் தரப்போகும் நெருக்கடி.. சமாளிக்க முடியுமா?
“இப்படிப்பட்ட சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு பந்து வீசும்போது, எப்படி மேலும் சிறப்பாக செயல்படலாம் என்று தொடர்ந்து முயற்சி செய்கிறேன்,” என்று ரவி பிஸ்னாய் தெரிவித்தார்,இதற்கிடையில், இந்திய கிரிக்கெட் அணி 2025 ஆசிய கோப்பைக்கு தயாராகி வருகிறது, இது செப்டம்பர் 9 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. இந்திய அணி தனது பயணத்தை செப்டம்பர் 10 ஆம் தேதி புரவலன் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு எதிராக தொடங்கும்.






