தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் மூன்று வடிவங்களுக்கும் சேர்த்து ஐசிசி முக்கியமான ஏழு விதிகளை திருத்தி அறிவித்திருக்கிறது. இனி எந்த அணிகளும் விதிகளை தந்திரமாக பயன்படுத்தி தப்பிக்க முடியாத அளவுக்கு சிறப்பான முறையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
முதல் நான்கு விதி மாற்றங்கள்
தலையில் பந்து தாக்கி மூளை அதிர்ச்சி ஏற்படுவதற்கு, முன்கூட்டியே மாற்று வீரர்களை அறிவிக்க வேண்டும். மேலும் மூளை அதிர்ச்சி அடைந்த அடுத்த ஏழு நாட்கள் விளையாட கூடாது. இதன் மூலம் தலையில் சிறு அடிபட்டாலே அதை வைத்து ஏமாற்றுவது தடுக்கப்படுகிறது.
இனி பவுண்டரி எல்லையில் கேட்ச் பிடிக்கும் பொழுது எல்லைக்கோட்டை ஒருமுறை மட்டுமே தாண்ட முடியும். இரண்டாவது முறையும் தாண்டி பிடித்தால் சிக்ஸ் கொடுக்கப்படும். மேலும் எல்லைக்கோட்டிற்கு பந்தை தடுத்து இன்னொரு ஃபீல்டருக்கு கொடுக்கும் பொழுது, தடுத்தவர் எல்லை கோட்டுக்கு வெளியே இருக்க வேண்டும்.
மேலும் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் ஒரு ஓவர் முடிவடைந்து 60 நொடிகளுக்குள் அடுத்த ஓவர் வீசுவதற்கு தயாராக இருக்க வேண்டும். ஒரு போட்டியில் மூன்று முறை இதை தவறும் பொழுது, வெளிவட்டத்தில் நிற்கும் பீல்டரின் எண்ணிக்கை குறைக்கப்படும்.
பேட்ஸ்மேன்கள் விக்கெட்டுக்கு இடையில் ஓடி ரன் எடுக்கும் பொழுது கிரீசை தொடாமல் வந்தால், ஒரு ரன் கூட கொடுக்கப்படாது. மேலும் பெனால்ட்டியாக 5 ரன்கள் பேட்டிங் செய்யும் அணிக்கு விதிக்கப்பட்டு அந்த ரன்கள் பவுலிங் செய்யும் அணிக்கு கொடுக்கப்படும். மேலும் இரண்டு பேட்ஸ்மேனில் யார் அடுத்த பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை எதிர் அணியே தீர்மானிக்கும்.
அடுத்த மூன்று புதிய விதிகள்
பந்தை மாற்றுவதற்காக குறுக்கு வழியில் எச்சில் தடவி பந்தை சேதப்படுத்தி வைத்தால், நடுவர்கள் பந்தை மாற்றி தர வேண்டிய அவசியம் இல்லை. எனவே வேறு பந்தை வாங்குவதற்காக குறுக்கு வழியில் செயல்பட முடியாது.
ஒருநாள் கிரிக்கெட்டில் 34 ஓவர்களுக்கு இரண்டு முனைகளிலும் இரண்டு புதிய பந்து பயன்படுத்தப்படும். இதற்குப் பிறகு மீதம் இருக்கும் ஓவருக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு பந்தில் ஏதாவது ஒரு பந்தை பந்து வீசும் அணி வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் ரிவர்ஸ் ஸ்விங் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 252 ஸ்ட்ரைக் ரேட்.. சூரியவன்சி சூறாவளி பேட்டிங்.. இங்கிலாந்து படுதோல்வி.. சிஎஸ்கே மத்ரே ஏமாற்றம்
மேலும் டி20 கிரிக்கெட்டில் மழை குறுக்கிட்டால் எத்தனை ஓவர் குறைக்கப்படுகிறதோ அதற்குத் தகுந்தவாறு பவர் பிளேவின் ஓவரும் தீர்மானிக்கப்படும். அதாவது போட்டி மழையால் நான்கில் ஒரு பாகம் 5 ஓவர்கள்தான் போட்டி நடக்கும் என்றால், அதேபோல பவர் பிளேவின் ஆறு ஓவரில் நான்கில் ஒரு பாகமாக 1.3 ஓவர்கள் மட்டுமே பவர் பிளேவுக்கு கொடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐசிசி இந்த ஏழு புதிய விதிகளை அறிவித்திருக்கிறது.






