“நான் நமாஸ் பண்ண நினைச்சு.. பயந்து பாதியில் செய்யாமல் விட்டேனா?” – சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சமி!

0
174
Shami

நடந்து முடிந்த ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் முதல் நான்கு ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்று மிகச் சிறப்பான துவக்கத்தை பெற்று இருந்தது.

ஆனாலும் ஹர்திக் பாண்டியா காயத்தால் வெளியேறி முகமது சாமி உள்ளே வந்த பிறகுதான் இந்திய அணி ஒட்டுமொத்தமாக உலகக் கோப்பை தொடரை ஆதிக்கம் செலுத்த தொடங்கியது.

- Advertisement -

நடந்து முடிந்த உலக கோப்பையில் அவர் பந்துவீச்சில் ஏற்படுத்திய தாக்கத்தால் பல சாதனைகளை அவர் முறியடித்தார். மேலும் அரை இறுதியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

அந்த போட்டியின் போது முதல் இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றி அவரே முதல் சரிவையும் ஏற்படுத்தினார். அதற்குப் பிறகு நியூசிலாந்து வில்லியம்சன் மற்றும் டேரில் மிட்சல் நிலைத்து விளையாட, மீண்டும் சமியே வந்து திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

ஒட்டுமொத்தமாக அந்தப் போட்டியில் அவர் ஏழு விக்கெட் கைப்பற்றி இந்திய அணியை இறுதிப் போட்டிக்கு தனி பந்துவீச்சாளராக அழைத்துச் சென்றார். அவருடைய கிரிக்கெட் வாழ்வில் அது முக்கிய போட்டியாக அமைந்தது.

- Advertisement -

அந்த போட்டியின் போது அவர் இஸ்லாமிய வழக்கப்படி கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மண்டியிட்டு வணங்க சென்று பின்பு அதைச் செய்யாமல் விலகி விட்டதாக ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கூறி வந்தார்கள். அப்படி செய்தால் அவருக்கு இந்தியாவில் எதிர்ப்பு வரும் என்று கூறினார்கள்.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள முகமது சமி கூறும் பொழுது “நான் மண்டியிட்டு சஜ்தா செய்ய வேண்டும் என்றால் என்னை யார் தடுக்க போகிறார்கள்? அதேபோல் நான் பிற மதத்தினரையும் தடுக்க மாட்டேன். நான் அதைச் செய்ய விரும்பினால் செய்வேன். அதில் என்ன பிரச்சனை இருக்கிறது?

நான் ஒரு முஸ்லிம். நான் ஒரு இந்திய முஸ்லிம் என்பதை மிகப் பெருமையாக சொல்வேன். அதனால் இதில் என்ன பிரச்சனை? எனக்கு இதனால் ஏதாவது பிரச்சனை என்றால் நான் இந்தியாவில் வசிக்க முடியுமா? நான் மண்டியிட்டு கடவுளை வணங்க யாரிடமாவது அனுமதி வாங்க வேண்டுமென்றால் இங்கே இருக்க முடியுமா?

நான் சஜ்தா செய்ய விரும்பியும் செய்யாமல் விட்டதாக சமூக வலைதளங்களில் பார்த்தேன். நான் இதற்கு முன்பு அப்படியே ஏதாவது செய்து இருக்கிறேனா? நான் என் வாழ்க்கையில் இதற்கு முன்பு நிறைய முறை ஐந்து விக்கெட் எடுத்திருக்கிறேன். அப்போதும் இந்த மாதிரி செய்ததில்லையே.

நான் அதை எங்கு செய்ய வேண்டும் சொல்லுங்கள். நான் இந்தியாவில் அதை எங்கு வேண்டுமானாலும் செய்ய முடியும். என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது. நான் எனது வரம்பிற்கு அப்பாற்பட்டு 200 சதவீதம் முயற்சி உடன் அந்த போட்டியில் பந்து வீசினேன்.

எனவே நான் அப்பொழுது களைப்பாக இருந்தேன். என்னை யாரோ பின்னால் இழுப்பது போல இருந்தது. நான் அதனால் அப்படியே மண்டியிட்டு அமர்ந்தேன். அந்த விஷயத்தில் அவ்வளவுதான் நடந்தது!” என்று புன்னகையுடன் கூறி இருக்கிறார்!