டி20 கிரிக்கெட் போட்டியை ஓடிஐ போல் ஆடுகிறார் – இளம் குஜராத் டைட்டன்ஸ் வீரருக்கு வகுப்பெடுத்த வீரேந்திர ஷேவாக்

0
591
Virender Sehwag

ஐ.பி.எல் கிரிக்கெட்டின் பதினைந்தாவது சீசன் கடந்த சனிக்கிழமை ஆரம்பித்திருக்கிறது. இதவரை நடந்துள்ள நான்கில் மூன்று ஆட்டங்களின் முடிவுகள் கிரிக்கெட் இரசிகர்கள், விமர்சகர்கள், முன்னாள் பிரபல வீரர்களின் கணிப்புகளைப் பொய்யாக்கியே இருக்கிறது.

குறிப்பாய் மிடில்-ஆர்டர் அதிக பலகீனத்தோடு இருக்கும் குஜராத் அணி லக்னோ அணியிடம் தோல்வியை தழுவும் என்றும் பெரும்பாலானவர்கள் கணித்திருக்க, பந்துவீச்சு, பேட்டிங் என்று அமர்க்களப்படுத்திய குஜராத் லக்னோ வீழ்த்தியது. இறுதிக்கட்டத்தில் விளையாடிய மில்லர், திவாட்டியா, அபினவின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.

ஆனால் இந்திய அணியின் முன்னாள் அதிரடி துவக்க ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக், தோற்ற லக்னோ அணியின் பேட்ஸ்மேன்கள் தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனியை உதாரணமாக வைத்து, வென்ற குஜராத் அணியின் துவக்க ஆட்டக்காரரும், இந்திய அணியின் எதிர்கால வீரராகவும் பார்க்கப்படுகிற சுப்மன் கில்லுக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளார்.

அவர் தனது அறிவுரையில் கூறியுள்ளதாவது ” பவர்-ப்ளேவில் நன்றாக பவுண்டரிகள் ஆடுவது, ஒருநாள் மற்றும் ட்வென்ட்டி ட்வெண்டி போட்டிகளில் துவக்க வீரராய் இருப்பதற்கான அடிப்படை தகுதியாகும். இந்தத் தகுதி சுப்மன் கில்லிடம் உள்ளது. அவர் கூறும்பொழுது இப்பொழுது ட்வென்ட்டி ட்வென்ட்டியில் ரன்கள் அடிப்பதற்காக சில சீக்கி ஷாட்ஸ்களை கற்றுவருவதாய் தெரிவித்திருந்தார். ஆனால் நார்மலான ஷாட்ஸ்களை பவர்-ப்ளேவில் ஆடி ரன்களை கொண்டுவந்து பின்பு ரன்களை அதிகரிக்கத்தான் சீக்கி ஷாட்ஸ்கள் தேவை. நானோ, சச்சினோ, கம்பீரோ சீக்கி ஷாட்ஸ்களை ஆரம்பத்தில் ரன் அடிப்பதற்காகப் பயன்படுத்தவில்லை” என்று கூறிய அவர்,

மேலும் தொடர்ந்து “அவரது ஸ்ட்ரைக் ரேட் சென்ற வருடம் 120. இந்த வருடம் 150 ஆக்குவார் என்று எதிர்பார்த்தோம். அவர் 20-30 ரன்கள் எடுத்து அவுட் ஆகிவிடுவதால் அவரது ஸ்ட்ரைக்ரேட்டை உயர்த்த முடிவதில்லை. அவர் நின்று விளையாடினால்தான் ஒரு குறிப்பிட்ட ஸ்கோருக்குப் பிறகு சீக்கி ஷாட்ஸ்கள் விளையாடவும் எளிதாக இருக்கும். ஸ்ட்ரைக் ரேட்டையும் உயர்த்த முடியும். லக்னோ அணியின் தீபக்ஹூடா-பதோனி இதைத்தான் செய்தார்கள். நாங்களும் இதைத்தான் செய்தோம். சுப்மன் கில்லும் இதைத்தான் செய்ய வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்!