இந்தியா 4-0 ன்னு ஜெயிக்கலாம், ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கு – கங்குலி பேட்டி!

0
814

இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறலாம். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது என்று பேட்டியளித்துள்ளார் சௌரவ் கங்குலி.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டிராபிக்கான டெஸ்ட் தொடரில் நான்கு போட்டிகள் இடம் பெற்றிக்கின்றன. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை வகிக்கிறது.

- Advertisement -

கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகள் இந்தூர் மற்றும் அகமதாபாத் மைதானங்களில் அடுத்தடுத்து நடைபெறவிருக்கிறது. இவை இரண்டையும் வெற்றி பெற்று 4-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி வரலாறு படைக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கிறேன். ஆனால் அதில் ஒரு சிக்கல் இருக்கிறது என்று சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் முன்னாள் பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி. அவர் பேசியதாவது:

“எனது கண்ணிற்கு இந்திய அணி 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றும் என்று தெரிகிறது ஆனால் இந்த கனவு நனவாவதில் ஒரு சிக்கல் இருக்கிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் எதிர்பார்த்து அளவிற்கு செயல்படவில்லை. கீழ் வரிசையில் விளையாடி வரும் ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக பேட்டிங் செய்து அணியை காப்பாற்றி வருவதால் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் செய்யும் தவறு நமக்கு தெரியவில்லை.

- Advertisement -

முதல் இரண்டு டெஸ்ட்டிலும் சரியான துவக்கம் கிடைக்கவில்லை. மிடில் ஆர்டரில் விக்கெட்டுகளை இழந்து வருகின்றனர். ஆல்ரவுண்டர்களின் விக்கெட்டுகளை ஆஸி., அணி எடுத்திருந்தால் நிச்சயம் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அவர்கள் கை ஓங்கியிருக்கும். கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆஸி., அணி அந்த தவறை செய்யாமல் பார்த்துக் கொள்வார்கள். ஆகையால் இந்தியாவின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஜொலிக்க வேண்டும். இது நடக்கும் பட்சத்தில் கட்டாயம் இந்திய அணி 4-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றலாம்.

இந்திய அணியின் பந்துவீச்சை பற்றி கூறுவதற்கு எதுவுமே இல்லை. வேகப்பந்துவீச்சாளர்கள் ஸ்பின் பிட்ச்சில் இவ்வளவு சிறப்பாக பந்து வீசுகிறார்கள். சுழல் பந்துவீச்சாளர்கள் நீயா? நானா? என்று போட்டி போட்டுக்கொண்டு விக்கெட்டுகளை எடுக்கிறார்கள். இந்தியாவிற்கு பேட்டிங் மட்டுமே சற்று பின்னடைவாக இருக்கிறது. அதை பார்த்துக்கொள்ள வேண்டும்.” என்றார்.