நெட் ரன்ரேட் எப்படி வொர்க் ஆகுதுன்னு தெரியல; அடுத்த போட்டியில் நாங்கள் இதைத்தான் செய்யப்போகிறோம் – சிரித்துக்கொண்டே சொன்ன ரோகித் சர்மா!

0
3040

‘ரன்ரேட் கணக்கீடு எப்படி வேலை செய்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. அடுத்த போட்டியில் எங்களுடைய திட்டம் இதுதான்.’ என்று பேட்டியளித்துள்ளார் ரோகித் சர்மா.

இந்த வருட ஐபிஎல் சீசனின் கடைசி கட்ட லீக் போட்டிகளில் மும்பை மற்றும் லக்னோ அணிகள் மோதின. போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 35 ரன்களுக்கு மூன்று விக்கெட்டுகளை இழந்து பரிதாபமான நிலையில் இருந்தது.

- Advertisement -

மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் உள்ளே வந்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் நின்று 47 பந்துகளில் 89 ரன்கள் விளாசினார். க்ருனால் பாண்டியா இவருக்கு பக்கபலமாக நின்று 42 பந்துகளுக்கு 49 ரன்கள் அடித்திருந்தார். இதனால் 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 177 ரன்கள் குவித்தது லக்னோ அணி.

இலக்கை துரத்திய மும்பை அணிக்கு இஷான் கிஷன் மற்றும் ரோகித் சர்மா இருவரும் முதல் விக்கெட்டுக்கு 90 ரன்கள் சேர்த்து வலுவான துவக்கம் அமைத்தனர். ரோகித் சர்மா 37 ரன்கள், இஷான் கிஷன் 59 ரன்கள் அடித்து ஆட்டமிழக்க, அடுத்து வந்தவர்கள் சொற்பரன்களுக்கு ஆட்டம் இழந்து அணியை அழுத்தத்தில் வைத்தனர்.

கடைசி 2 ஓவர்களில் 30 ரன்கள் தேவைப்பட்டபோது, களத்தில் இருந்த டிம் டேவிட் (19 பந்துகளில் 32 ரன்கள்) மற்றும் கேமரூன் கிரீன் இருவராலும் போட்டியை பினிஷ் செய்து கொடுக்க முடியவில்லை. கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட்டது. சிறப்பாக வீசிய மோசின் கான், ஐந்து ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி அபாரமாக வெற்றி பெற்றது.

- Advertisement -

தொடரின் மிக முக்கியமான லீக் போட்டியை இழந்த மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா போட்டி முடிந்த பிறகு அளித்த பேட்டியில்,

“போட்டியை வெற்றி பெறும் அளவிற்கு நாங்கள் விளையாடவில்லை. ஆட்டத்தில் ஆங்காங்கே சிறு சிறு தருணங்களில், நாங்கள் தவறு செய்து விட்டோம். அந்த இடத்தில் தான் எங்களால் வெற்றிபெற முடியாமல் போனது.

போட்டிக்கு முன்பு இந்த பிட்ச் பற்றி நன்றாக அலசி ஆராய்ந்துவிட்டோம். நன்றாக பேட்டிங் செய்யக்கூடியதாக இருந்தது. மேலும் நன்றாக சேஸ் செய்ய முடியும் என்று திட்டமிட்டு முதலில் பவுலிங் செய்தோம். துரதிஷ்டவசமாக போட்டியின் இரண்டாம் பாதியில் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை.

எங்களது டெத் ஓவர்களில் நாங்கள் நிறைய ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம். அதே நேரம் நாங்கள் டெத் ஓவர்களில் குறைவாக அடித்தோம். இருப்பினும் நாங்கள் பேட்டிங்கில் ஆரம்பித்த விதம் எங்களை வலுவாக முன்நிறுத்தியது. சேஸ் செய்யக்கூடிய நிலையிலும் இருந்தோம். ஆனால் நான் முன்பே சொன்னது போல, ஆங்காங்கே சில தருணங்களில் தவறு செய்துவிட்டோம்.

அவர்களுக்கு ஸ்டாய்னிஸ் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்தார். இந்த பிட்ச்சில் இடது வலது பக்கம் அடிக்காமல் நேராக அடித்தார். அதுதான் நாங்களும் செய்திருக்க வேண்டும். அவரிடமிருந்து மிகச்சிறந்த ஆட்டம் வெளிப்பட்டது.

உண்மையில் எனக்கு நெட் ரன்ரேட் எப்படி கணக்கீடு செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால் கடைசி போட்டியில் களமிறங்கி எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவோம். எங்களுடைய பலம் என்னவென்று அறிந்து அதற்கு ஏற்றவாறு ஆடுவோம். இதுதான் எங்களுடைய திட்டம். கடைசி தருணத்தில் புதிதாக வேறு எதைப் பற்றியும் யோசிக்கமுடியாது.” என்றார்.