பட்லருக்கு தனியா பிளான் எதுவும் பண்ணல, கிரிக்கெட் மூளையை யூஸ் பண்ணேன் சிக்கிட்டாரு – ஆட்டநாயகன் மார்கஸ் ஸ்டாய்னிஷ் பேட்டி!

0
178

‘இன்றைய போட்டியில் பட்லர் விக்கெட் எடுக்கவேண்டும் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கு தனி திட்டம் ஒன்றும் வகுக்கவில்லை. வெறுமனே கிரிக்கெட் மூளையை மட்டுமே பயன்படுத்தினேன். மாட்டிக் கொண்டார்’ என்று போட்டி முடிந்த பிறகு பேசி உள்ளார் ஆட்டநாயகன் மார்கஸ் ஸ்டாய்னிஷ்.

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணிக்கு கேஎல் ராகுல் மற்றும் கைல் மேயர்ஸ் இருவரும் மந்தமான துவக்கம் கொடுத்தனர். பிட்ச் முழுக்க முழுக்க பவுலிங்கிற்கு நன்றாக எடுபட்டதால் பேட்ஸ்மேன்கள் ரன்குவிக்க திணறினர்.

- Advertisement -

கேஎல் ராகுல் 39 ரன்கள், கைல் மேயர்ஸ் 51 ரன்கள் அடித்து அவுட் ஆகினர். பின்னர் வந்த ஸ்டாய்னிஸ் 21 ரன்கள், பூரான் 29 ரன்கள் அடித்துக்கொடுக்க 20 ஓவர்கள் முடிவில் 154 ரன்கள் அடித்து 7 விக்கெட்டுகள் இழந்திருந்தது.

இலக்கை துரத்திய ராஜஸ்தான் அணிக்கு துவக்கம் மிகச்சிறப்பாக அமைந்தது. ஜெய்ஷ்வால் 44 ரன்கள், பட்லர் 40 ரன்கள் அடித்து ஸ்டாய்னிஸ் ஓவரில் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் எவருமே பெரிதளவில் சோபிக்கவில்லை.

ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 155 ரன்கள் இலக்கை எட்டமுடியவில்லை. தட்டுத்தடுமாறி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே அடித்தது. இறுதியாக 10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

பேட்டிங்கில் முக்கியமான கட்டத்தில் களமிறங்கி 16 பந்துகளில் 21 ரன்கள் மற்றும் பந்துவீச்சில் ஜெய்ஷ்வால் மற்றும் பட்லர் ஆகிய இரண்டு முக்கியமான வீரர்களின் விக்கெட்டுகளை கைப்பற்றிய மார்கஸ் ஸ்டாய்னிஷ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். விருதைப் பெற்ற பிறகு பேட்டி அளித்த அவர் கூறுகையில்,

“இன்று பவுலிங் மூலம் நல்ல பங்களிப்பை கொடுத்தது மகிழ்ச்சியை கொடுக்கிறது. பட்லர் விக்கெட் எடுத்தது மிக முக்கியமானது. ஆனால் அவருக்கு என்று தனியாக எந்தவித திட்டமிடலும் நான் செய்யவில்லை. அந்த நேரத்தில் சில கிரிக்கெட் யுக்திகளை பயன்படுத்தி பிட்ச் செயல்பட்ட விதத்திற்கு ஏற்றவாறு பந்துவீசினேன். அவரே மாட்டிக்கொண்டு ஆட்டம் இழந்துவிட்டார்.

இந்த பிட்ச் பேட்டிங் செய்வதற்கு சற்று கடினமாக இருக்கிறது என்று அறிந்து கொண்டோம். ஆகையால் கடைசி 20 பந்துகளில் 50 ரன்கள் இருந்தால் தான் கட்டுப்படுத்த முடியும் என்கிற அவசியமில்லை என்றும் முடிவு செய்தோம். அதற்கு ஏற்றவாறு திட்டங்களை வகுத்தோம். அடுத்தடுத்த போட்டிகளிலும் நான்கு ஓவர்களை முழுமையாக வீசுவேனா என்பதை கேப்டனிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும் (அடுத்த போட்டிக்கும் 4 ஓவர்கள் முழுமையாக வீசுவீர்களா என்று கேட்டதற்கு).” என்று போட்டி முடிந்த பிறகு பேசியுள்ளார் மார்கஸ் ஸ்டாய்னிஷ்.