வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடருக்கு முன்னதாக, இந்திய அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷியுடன் டிரஸ்ஸிங் ரூமைப் பகிர்வது குறித்தும், அவரை அணியில் வசதியாக உணர வைப்பது குறித்தும் இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா பேசிய கருத்துக்கள் குறித்து இக்கட்டுரை விளக்குகிறது.
சமீபத்தில் நிறைவடைந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2026 தொடரில் இந்திய அணி தங்கம் வெல்ல அபிஷேக் சர்மா முக்கியப் பங்காற்றினார். பாகிஸ்தானுக்கு எதிரான இறுதிப் போட்டியில் சவாலான பிட்ச்சில் 28 பால்களில் 61 ரன்கள் விளாசி அசத்திய அவர், 15 வயதான இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியுடன் இணைந்தே இன்னிங்ஸைத் தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து அபிஷேக் சர்மா பேசும்போது “வைபவை எவ்வாறு மிகவும் சௌகரியமாக உணர வைப்பது என்பது குறித்து நாங்கள் அடிக்கடி விவாதிக்கிறோம். அவர் என்ன சாதனைகளைச் செய்துள்ளார் என்பதையும், அவர் இந்த இடத்திற்கு தகுதியானவர் என்பதையும் நாம் அனைவரும் அறிவோம். ‘நாங்கள் அனைவரும் உன்னுடைய மூத்த சகோதரர்களாக இங்கே இருக்கிறோம், நீ ஆட்டத்தை என்ஜாய் செய்து உனது சிறந்த ஆட்டத்தைக் கொடுத்தால் போதும்’ என்பதை அவர் உணர வைப்பது எனது கடமை என்று நான் கருதுகிறேன்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் தொடர்ந்து பேசும்போது “அவரது வயதில் இருக்கும் மற்ற சிறுவர்களைப் போலல்லாமல், அவர் மிகவும் புத்திசாலி என்று நான் நினைக்கிறேன். அவர் ஏற்கனவே 2-3 ஆண்டுகளாக கிரிக்கெட் அமைப்பில் இருக்கிறார். அதனால் என்ன செய்ய வேண்டும், எங்கு செய்ய வேண்டும், எவ்வளவு பிராக்டீஸ் செய்ய வேண்டும் என்பது அவருக்குத் தெரியும். அனுபவத்தின் மூலம் அவர் இவற்றை படிப்படியாகக் கற்றுக்கொள்வார் என்று நான் உணர்கிறேன்” என்று கூறி இருக்கிறார்.
மேலும் அவர் பேசும்போது “நான் தொடங்கும்போது, எனது அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் விளையாட வேண்டும் என்று விரும்பியது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. அது உள்ளூர் கிரிக்கெட்டில் எனது பஞ்சாப் அணியில் இருந்தே தொடங்கியது” என்று கூறி முடித்து இருக்கிறார்.






