“அவர்கள் கவலைப்படாமல் எப்படி இருக்க முடியும்?” – அணி நிலைமை குறித்து கங்குலி பேச்சு!

0
311
Ganguly

கடந்த டி20 உலக கோப்பையில் இந்திய அணி படுதோல்வி அடைந்ததை அடுத்து, இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட் அணிக்கு என்னென்ன பிரச்சினைகள் இருக்கிறது என்று பார்த்து, அந்தப் பிரச்சனைகளை சரிசெய்ய, புதிய கேப்டன் ரோகித் சர்மா புதிய தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையில் சீர்திருத்த வேலைகள் நடைபெற்று வந்தன.

இந்திய வெள்ளை பந்து கிரிக்கெட் அணிக்கு முதலில் பேட் செய்து சரியான இலக்கை நிர்ணயிப்பது சிக்கலாக இருந்து வந்தது. இதனால் அணியில் உள்ள எல்லா வீரர்களும் தைரியமாக அடித்து ஆடுவது என்கின்ற முறை உருவாக்கப்பட்டது. இதற்கு கைமேல் பலனும் கிடைத்தது. இந்திய டி20 அணியின் பவர் பிளே ஸ்கோர் உயர்ந்தது. மேலும் முதலில் பேட் செய்து நிர்ணயிக்கும் இலக்கும் பெரிதாக உயர்ந்தது.

- Advertisement -

இந்த சமயத்தில் அணி புதிய வீரர்களை கொண்டு வந்தார்கள். அதேபோல் ஆடாமல் அணிக்கு வெளியே இருந்த பழைய வீரர்களையும் உள்ளே கொண்டு வந்தார்கள். பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் புதிய கூட்டணிகளை உருவாக்கி பரிசோதனை செய்தார்கள். இந்தக் காலக்கட்டத்தில் பரிசோதனை முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்றாலும் கூட இந்திய அணி நல்ல முடிவுகளையே பெற்று வந்தது.

ஆசியக் கோப்பை தொடருக்கு இந்திய அணியை அறிவிக்கும் பொழுது, காயமடைந்து இருந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஹர்சல் படேல் இருவரும் இடம் பெறவில்லை. இதற்கு அடுத்து இந்திய டி20 அணிக்கு ஏற்பட்ட, பாகிஸ்தான் இலங்கை ஆஸ்திரேலியா என்று ஏற்பட்ட மூன்று தோல்விகள், இதுவரை இந்திய அணி நிர்வாகம் செய்து வந்த அத்தனை சீர்திருத்தங்களையும், உழைப்பையும் கேள்விக்கு உள்ளாக்கி விட்டது.

இந்திய டி20 அணியின் பேட்டிங் மிகச் சிறப்பாக விளங்கி வரும் வேளையில், பந்துவீச்சு துறை மிக மோசமாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமாரின் இறுதிகட்ட ஓவர்கள் மிகவும் சுமாராக இருக்கிறது. மேலும் காயத்திலிருந்து வந்த ஹர்ஷல் படேல் பந்துவீச்சில் எந்த நல்ல அறிகுறியும் தென்படவில்லை. மேலும் சுழற்பந்துவீச்சாளர் சாகலின் பந்துவீச்சை பார்க்கும்பொழுது எதிரணி பேட்ஸ்மேன்கள் மிக சுலபமாக அவரை விளையாடுவதோடு ரன்களை குவிக்கிறார்கள். இது எல்லாம் திடீரென்று இந்திய அணிக்கு இப்பொழுது பெரிய சிக்கல்களை கொண்டு வந்திருக்கிறது.

- Advertisement -

இது குறித்த கேள்விகள் இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் கேப்டனும், தற்போதைய பிசிசிஐயின் தலைவருமான சவுரவ் கங்குலி இடம் முன்வைக்கப்பட்டது. அவர் பதிலளிக்கையில் நம்பிக்கை உடனே கூறியிருக்கிறார்.

இதுபற்றி சவுரவ் கங்குலி கூறும்பொழுது ” ரோகித் சர்மாவின் வெற்றி சதவிகிதம் கிட்டத்தட்ட 80 ஆகும். இந்தியா கடந்த மூன்று நான்கு ஆட்டங்களில் தான் தோல்வி கண்டுள்ளது. அதற்கு முன் அவர்கள் 35, 40 போட்டிகளில் விளையாடி வெற்றி பெற்றிருக்கிறார்கள். ஒரு 6, 7 போட்டிகளில் மட்டும் தான் தோல்வியை தழுவி இருக்கிறார்கள் ” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் இருவரும் அணி மற்றும் எல்லாவற்றையும் பற்றி கவலைப்படுவார்கள். அவர்கள் நிச்சயம் முன்னேறுவார்கள் என்று நான் நம்புகிறேன். ஓரிரு தோல்விகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனால் அதே சமயத்தில் நாங்கள் பெரிய போட்டிகளில் தோல்வி அடைந்திருக்கிறோம் இதுபற்றி நாங்கள் நிச்சயம் பேசுவோம்” என்று கூறியிருக்கிறார்.