இந்திய அணி 17 ஆண்டுகளுக்குப் பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒரு கிரிக்கெட் தொடரை இழந்திருக்கிறது. இந்திய அணியின் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் இறுதியாக நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-3 என நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்திய அணி இழந்தது!
இந்த தொடரை பொருத்தவரையில் எடுத்துக் கொண்டால் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி சரியான முறையில் இல்லை. அவர் பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் விதம் மோசமாகவே இருந்து வந்திருக்கிறது.
இரண்டாவது போட்டியில் அக்சர் படேல் மற்றும் சாகல் இருவரும் வீசி இருக்க வேண்டிய ஓவர்களை வேகப்பந்துவீச்சாளர்களிடம் கொடுத்து மிக எளிதாக தோற்றார். அதேபோல் இந்த தொடரில் அக்சர் படேலை அவர் பயன்படுத்திய விதம் புரியவே இல்லை. மேலும் சாகல் ஓவரையும் அவர் சரியான விதத்தில் ஆரம்பப் போட்டிகளில் முடிக்கவில்லை.
இவரது கேப்டன்சி குறித்து ஆரம்பம் முதலில் இந்த தொடரில் விமர்சனங்கள் முன்னாள் வீரர்களிடமிருந்து வர ஆரம்பித்துவிட்டது. தொடரை இழந்ததும் விமர்சனங்கள் அதிகரித்து இருக்கிறது. தற்பொழுது மிக தெளிவாக தன்னுடைய விமர்சனத்தை கேப்டன் ஹர்திக் பாண்டியா மீது இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா வைத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது
“இந்த போட்டியில் ஹர்திக் பந்து வீச வந்தது முற்றிலும் புதிய கதையாக இருந்தது. இதற்கு முந்தைய போட்டிகளில் அக்சர் பட்டேல் வீசினார். ஆனால் இந்த போட்டியில் அவர் ஒட்டுமொத்தமாக வீசியது ஒரே ஓவர்தான். அவரை கேப்டன் ஹர்திக் பாண்டியா பயன்படுத்திய விதம் உண்மையில் எங்களுக்கு எப்படி என்றே தெரியவில்லை.
நிக்கோலஸ் பூரன் வந்தால் குல்தீபை பந்து வீச சொல்வீர்கள். இல்லையென்றால் அந்த ஓவர்களை அக்சர் படேலை வீச வைப்பீர்கள். இதே நிக்கோலஸ் பூரன் டாப் ஆர்டரில் வந்தால் என்ன செய்வீர்கள்? நேற்றைய போட்டியில் அவர் டாப் ஆர்டரில் வந்தார். ஹர்திக் உடனே அக்சர் படேலை பயன்படுத்தவில்லை. நாங்கள் 10 வீரர்களுடன் விளையாடியது போல இருந்தது.
ஹர்திக் பாண்டியா புதிய பந்தில் வீசினார். இந்த முறை அவர் அடி வாங்கினார். இந்த தொடர் முழுவதும் முகேஷ் குமாரை புதிய பந்தில் பந்து வீச விடவில்லை. ஆனால் அவர் தனக்கு கிடைத்த வாய்ப்பில் விக்கெட் எடுத்தார். ஒருநாள் கிரிக்கெட் தொடரில் புதிய பந்தில் அவர் வீசினார்.
நீங்கள் முகேஷ் குமாரை முற்றிலும் பழைய பந்து காண பந்துவீச்சாளராக மாற்றி விட்டீர்கள். பந்துவீச்சு மாற்றங்கள் குறித்து எனக்கு எதுவுமே புரியவில்லை. நான் இது குறித்து விளக்கமாக பேசவும் விரும்பவில்லை!” என்று வருத்தமாக கூறியிருக்கிறார்!