இவரின் தாயார் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வருகிறார் ; இருப்பினும் ராஜஸ்தான் அணிக்காக சிறப்பாக செயல்படுகிறார் – குமார் சங்கக்காரா

0
95
Kumar Sangakkara

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனின் இரண்டாது தகுதிசுற்றுப் போட்டி நேற்று குஜராத் அகமதாபாத் நகரின் நரேந்திர மோதி மைதானத்தில் நடந்தது. இந்த ஆட்டத்தில் இறுதிபோட்டிக்குத் தகுதி பெற்ற குஜராத் அணியோடு தோற்ற ராஜஸ்தான் அணியும், எலிமினேட்டர் போட்டியில் லக்னோ அணியை வீழ்த்திய பெங்களூர் அணியும் மோதின!

ராஜஸ்தான் அணியிலும், பெங்களூர் அணியிலும் நேற்று எந்த மாற்றங்களும் செய்யப்படவில்லை. பழைய அணியே தொடர்ந்தது. இந்தத் தொடரில் டாஸ் தோற்பதில் புதிய ஐ.பி.எல் சாதனையை நிகழ்த்தி இருந்த ராஜஸ்தான் கேப்டன் இந்த முறை டாஸ் வென்று முதலில் பந்து வீசுவது என தீர்மானித்தார்.

- Advertisement -

இதன்படி பெங்களூர் அணிக்குத் துவக்க ஆட்டக்காரர்களாக வந்த விராட்கோலி உடனே வெளியேற, பத்து ஓவர்கள்கள் வரை தாக்குப்பிடித்து தடுமாறி கேப்டன் பாஃப் டூ பிளிசிஸ் வெளியேறினார். 180 ரன்களை எளிதாய் பெங்களூர் அணி எட்டும் என்றிருந்த நிலையில், இறுதிக்கட்டத்தில் பந்துவீசிய கரீபியன் வேகப்பந்து வீச்சாளர் ஓபிட் மெக்காய், பிரசித் கிருஷ்ணா ஆகியோரது சிறப்பான பந்துவீச்சால் பெங்களூர் இருபது ஓவர்களில் 157 ரன் மட்டுமே எடுத்தது. பெங்களூர் அணியில் ரஜத் பட்டிதார் மட்டுமே சிறப்பாக விளையாடி 42 பந்துகளில் 58 ரன்கள் அடித்தார்!

பின்பு 158 ரன் என்ற இலக்கை நோக்கி நம்பிக்கையாகக் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர் ஜோடி அதிரடியில் மிரட்டியது. இறுதிவரை நிலைத்து நின்று விளையாடிய ஜாஸ் பட்லர் இந்தத் தொடரில் தனது நான்காவது சதத்தை அடித்ததோடு, 18.1 ஓவரில் சிக்ஸர் அடித்து ராஜஸ்தான் அணியை வெற்றி பெற வைத்தார். இந்த ஆட்டத்தில் அவர் 60 பந்துகளில் 106 ரன்களை குவித்ததோடு, இந்தத் தொடரில் 16 ஆட்டங்களில் 824 ரன்களை குவித்து ஆரஞ்ச் தொப்பியிடம் யாரையும் நெருங்க விடாமல் செய்திருக்கிறார்!

இந்தப் போட்டியில் ராஜஸ்தான் வெற்றிக்கு ஜோஸ் பட்லரின் பேட்டிங் எந்தளவிற்குக் காரணமோ, அதேபோல ஒபிட் மெக்காயின் சிக்கனமான பந்துவீச்சும் ஒரு முக்கியக் காரணம். கடைசி ஐந்து ஓவர்களில் இரண்டு ஓவர்களை ஸ்பின்னர்கள் வீசியே ஆகவேண்டிய சூழலில், இவர் தனக்கு மீதம் இருந்த இரண்டு ஓவர்களில் 11 ரன்களை மட்டுமே கொடுத்து இரண்டு விக்கெட்டுகளையும் கைப்பற்றினார். இதற்கு முன் ஆட்டத்தின் 11வது ஓவரில் பெங்களூர் கேப்டன் பாஃப் டூ பிளிசிஸையும் வீழ்த்தி இருந்தார். இந்த ஆட்டத்தில் நான்கு ஓவர்கள் வீசிய இவர் 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்த இவர் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

- Advertisement -

இவரைக் குறித்துப் பேசியுள்ள ராஜஸ்தான் அணியின் தலைமைப் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா ஒரு முக்கியமான விசயத்தைக் குறிப்பிட்டார். அதில் “மெக்காயின் தாய் வெஸ்ட் இன்டீசில் உடல்நலம் இல்லாமல் இருக்கிறார். இந்தச் சூழலில் இவர் ராஜஸ்தான் அணிக்காக வெளிப்படுத்தியுள்ள சிறப்பான ஆட்டம் குறிப்பிடத்தக்க முக்கியமானது” என்றிருக்கிறார்!