ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி குசால் மெண்டிஸ்-ன் அபார சதத்தால் 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 281 ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடிய மெண்டிஸ் 101 ரன்களையும், கேப்டன் அசலங்கா 78 ரன்களையும் விளாசினர்.
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 24.2 ஓவர்களில் வெறும் 107 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் இலங்கை அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வென்று புதிய வரலாறு படைத்தது. கடந்த ஆண்டு நடந்த ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என்ற வீழ்த்திய இலங்கை அணி, தற்போது ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி அசத்தி இருக்கிறது.
சிறந்த ஒருநாள் கிரிக்கெட் அணி
சொந்த மண்ணில் கடைசியாக ஆடிய 7 ஒருநாள் தொடர்களிலும் இலங்கை அணி அபார வெற்றியை பெற்று இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் 2024ஆம் ஆண்டு முதல் இலங்கை அணி ஆடியுள்ள 23 ஒருநாள் போட்டிகளில் 15ல் வென்று அசத்தி இருக்கிறது. வெறும் 5 போட்டிகளில் மட்டுமே தோல்வியை சந்தித்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்கு பின் இலங்கையை தவிர்த்து வேறு எந்த அணியும் 10 ஒருநாள் போட்டிகளில் கூட வென்றதில்லை.
இதனால் தற்போதைய சூழலில் ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கை அணி மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஆனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இலங்கை அணி விளையாடவில்லை. ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடர் இன்னும் 5 நாட்களில் தொடங்கவுள்ளது. இதில் பங்கேற்க உள்ள 8 அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த 8 அணிகளில் இலங்கை அணி இல்லை.
உலகக்கோப்பையில் நடந்த சம்பவம்
அதாவது 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுவதற்கான தகுதிச்சுற்றாக 2023 உலகக்கோப்பை தொடர் அமைந்தது. உலகக்கோப்பை தொடரில் டாப் 8 இடங்களை பிடிக்கும் அணிகள், ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தேர்வு செய்யப்படும். இலங்கை அணி நெட் ரன் ரேட் அடிப்படையில் 9வது இடத்தில் நிறைவு செய்தது.
வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை தோல்வியடைந்ததால், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க முடியவில்லை. அந்த போட்டியில்தான் மேத்யூஸ் டைம் அவுட் முறையில் அவுட் கொடுக்கப்பட்டார். மேத்யூஸை டைம் அவுட் முறையில் அவுட் செய்யப்படுவதற்கே சாம்பியன்ஸ் டிராபியில் வங்கதேசம் விளையாட வேண்டும் என்ற நோக்கத்தில்தான்.
இலங்கையை போலவே 2004ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடவில்லை. ஏனென்றால் உலகக்கோப்பை தொடருக்கே வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெறவில்லை. இதனால் ரசிகர்களிடையே ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.






