இலங்கை சென்று இருக்கும் இந்திய அணி தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை முழுமையாக வென்று இருக்கிறது. இதற்கு அடுத்து நாளை மறுநாள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இந்த நிலையில் ஓய்வில் செல்லும் இந்திய வீரர்களுக்கு தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் எச்சரிக்கை ஒன்றை கொடுத்திருக்கிறார்.
நாளை மறுநாள் ஆரம்பிக்கும் இலங்கை அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ஏழாம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இதற்கு அடுத்து இந்திய அணி நீண்ட நாட்கள் ஓய்வில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலக்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கு பிறகு செப்டம்பர் 19ஆம் தேதி உள்நாட்டில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதன் இரண்டாவது டெஸ்ட் போட்டி அக்டோபர் ஒன்றாம் தேதி ஆரம்பிக்கிறது.
மேலும் பங்களாதேஷ் அணிக்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் அக்டோபர் 6, 9, 12 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. எனவே தற்போது இலங்கை அணிக்கு எதிராக டி20 தொடரை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்லும் இந்திய வீரர்கள், ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் என இரண்டு மாதங்கள் முழு ஓய்வில் இருக்கப் போகிறார்கள். இது இந்திய கிரிக்கெட்டில் அடிக்கடி நடக்காத ஒரு சம்பவம்.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் தனிப்பட்ட காரணங்களால் விளையாட முடியாது எனக் கேட்டு ஓய்வு வாங்கி இருக்கிறார். மேலும் சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களும் டி20 கிரிக்கெட்டில் மட்டுமே விளையாடுகிறார்கள். எனவே இவர்கள் பெரிய ஓய்வில் செல்ல இருப்பதால், பயிற்சியாளர் கம்பீர் எதையும் மறைக்காமல் வீரர்களுக்கு வெளிப்படையான எச்சரிக்கையை உடல் தகுதி குறித்து கூறியிருக்கிறார்.
இதுகுறித்து அணி கூட்டத்தில் பேசிய கம்பீர் “பங்களாதேஷ் தொடருக்கு நீங்கள் மீண்டும் முழு உடல் தகுதியுடன் வருவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஓய்வு எடுக்கலாம் அதற்கு நீங்கள் தகுதியானவர்கள். அதைவிட முக்கியமாக அடுத்து வரவிருக்கும் தொடருக்கு உங்கள் உடல் தகுதி நிலைகளையும் திறமைகளையும் சரியாக வைத்துக் கொள்ளுங்கள்.நான் அப்படியே வருவேன் என்று நீங்கள் அணிக்கு திரும்பி வர முடியாது” என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்.
இதையும் படிங்க : டிராவிட் மட்டுமே செய்ய முடிந்த அதை.. மெக்கலம் செய்ய முடியாது.. கொஞ்சம் அவமானமானது – நாசர் ஹுசைன் கருத்து
கம்பீர் எப்பொழுதும் எந்த பொறுப்பிலும் மிகவும் கண்டிப்பானவர் என்று பலர் கூறியிருக்கிறார்கள். ஆனால் தேசிய அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் அப்படி இருக்க மாட்டார் என்று சிலர் கூறி வந்தார்கள். ஆனால் கம்பீர் தன்னுடைய முதல் தொடர் முடிவுக்கு பிறகு தான் எப்பொழுதும் மாற மாட்டேன் என்று தெளிவாகக் காட்டிவிட்டார்.






