“கடந்த 50 வருட கால கிரிக்கெட் வரலாற்றில் இவர் தான் மிக சிறந்த கேப்டன்” – ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் டாம் மூடி!

0
11190

பதினாறாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று நடைபெற இருக்கிறது . குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் நடைபெற இருக்கும் இந்த போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோத இருக்கின்றன .

நேற்று நடைபெற இருந்த ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால் இன்று இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது . இந்த இறுதிப் போட்டியில் நான்கு முறை சாம்பியன் பட்டம் பெற்ற சிஎஸ்கே அணி நடப்புச் சாம்பியன் குஜராத்தை எதிர்கொள்கிறது . குஜராத் அணியும் இரண்டாவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது .

- Advertisement -

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் முதலிடம் வகித்த குஜராத் இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டிகளிலும் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பெற்றது . இதனைத் தொடர்ந்து நடைபெற்ற முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் அந்த அணி சென்னை அணியிடம் 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தாலும் இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் மும்பை அணியை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது .

நேற்று அகமதாபாத் நகரில் பெய்த கனமழையால் இறுதிப்போட்டி நடைபெறவில்லை . இன்று குஜராத் மற்றும் சென்னை அணிகள் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன . . இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெறும் பட்சத்தில் ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று மும்பை அணியின் சாதனையை சமன் செய்யும் . குஜராத் அணி வெற்றி பெற்றால் தொடர்ந்து இரண்டாவது முறையாக அந்த அணி சாம்பியன் பட்டம் வெல்லும் .

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளர் டாம் மூடி இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனியை கடந்த 50 வருட கால கிரிக்கெட் வரலாற்றில் மிகச் சிறந்த கேப்டன் என பாராட்டி பேசி இருக்கிறார் . இது தொடர்பாக இஎஸ்பிஎன் கிரிக்இன்போ இணையதளத்தில் பேசியிருக்கும் அவர் இந்தப் பாராட்டை தெரிவித்திருக்கிறார் .

- Advertisement -

இது குறித்து பேசி இருக்கும் மூடி ” எம்எஸ் தோனி தான் டி20 கிரிக்கெட்டில் மிகச் சிறந்த கேப்டன் அது ஏன் என்பதற்கான காரணத்தை இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் அவர் நமக்கு காண்பித்திருக்கிறார் . டெஸ்ட் கிரிக்கெட்டை பொருத்தவரை நான் தோனியை மிகச்சிறந்த கேப்டன் என்று சொல்ல மாட்டேன் . ஆனால் ஒரு நாள் மட்டும் டி20 போட்டிகளில் அவர்தான் சிறந்த கேப்டன்” என்று கூறினார்.

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” கடந்த 50 வருட கால கிரிக்கெட்டில் எம்எஸ்.தோனி தான் சிறந்த வெள்ளைப் பந்து கேப்டன் என நான் கருதுகிறேன் . ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளை பற்றி அவரது புரிதலும் ஆட்டத்தின் போக்கை மாற்றும் தன்மையும் அபாரமாக இருக்கிறது . இந்த வருடத்தில் அவர் தான் ஒரு சிறந்த கேப்டன் என்பதற்கான பல உதாரணங்களை நமக்கு தந்திருக்கிறார்”என்று கூறி முடித்தார்.