“அவர் பெஸ்ட்னு அவருக்கே தெரியல.. தன்னம்பிக்கையே இல்ல.. ஆனா..!” – கவாஸ்கர் தைரியமான விமர்சனம்!

0
2322
ICT

இந்திய அணி காயத்தால் இழந்திருந்த தனது முக்கிய வீரர்களைச் சரியான நேரத்தில் மீட்டுக் கொண்டு வந்து, உள்நாட்டில் நடக்க இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரை சந்திக்க இருக்கிறது!

ஆனாலும் கூட இந்திய அணி தனது முதல் விக்கெட் கீப்பர் தேர்வாக வைத்திருந்த இடது கை அதிரடி விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்டை, எதிர்பாராத விபத்தில் ஏற்பட்ட காயத்தில் இருந்து உலகக் கோப்பைக்கு கொண்டு வர முடியவில்லை.

- Advertisement -

தற்போது ரிஷப் பண்ட் மறுவாழ்வில் ஆரம்பகட்டத்தில் சிற்சில பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இன்னும் சில வாரங்களில் அவர் கடினமான பயிற்சிகளை துவங்க கூடும். அவர் அடுத்த ஆண்டு துவக்கத்தில்தான் இந்திய அணிக்கு கிடைப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவருடைய விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் இடத்தை காயத்திலிருந்து திரும்பி வந்த கேஎல்.ராகுல் மிகச் சிறப்பாக நிரப்பி இருக்கிறார் என்றுதான் கூற வேண்டும்.

ஆசியக் கோப்பையில் அவர் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிக்கு எதிராக வெளிப்படுத்திய ஆட்டம் மிக அபாரமாக இருந்தது. அதே நேரத்தில் அவர் விளையாடாமல் இருந்து திரும்பி வந்தது போல தெரியவில்லை. மேலும் அவர் உடல் தகுதி மிகச் சிறப்பாக இருந்தது. பாகிஸ்தான் உடன் சதம் அடித்ததோடு விக்கெட் கீப்பிங் செய்து அசத்தினார்.

- Advertisement -

இந்த நிலையில் கே.எல்.ராகுல் பற்றி பேசி உள்ள சுனில் கவாஸ்கர் கூறும் பொழுது “அவர் நல்ல பிட்டாக இருப்பது மகிழ்ச்சியான விஷயம். அவருடைய தரம் என்ன என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவர் அதை நீண்ட காலமாக நிரூபித்து இருக்கிறார். அவருடைய உடல் தகுதி பற்றி மட்டுமே கேள்வி இருந்தது.

ஆனால் அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அடித்த சதத்தின் மூலம் அவரது உடல்தகுதி பற்றிய சந்தேகம் முடிவுக்கு வந்திருக்கிறது. அந்த போட்டியில் அவர் இறுதியில் விக்கெட் கீப்பிங் வந்து செய்தார்.

மேலும் அவர் அந்தப் போட்டியில் யாருடன் சேர்ந்து விளையாடினார் என்பதையும் பார்க்க வேண்டும். அவர் விக்கட்டுகளுக்கு இடையே மிக கடினமாக ஓடி ரன்கள் எடுக்கும் விராட் கோலி உடன் விளையாடினார். அவருக்கு இணையாக ஓடி ரன்கள் எடுத்தார். அவருடைய உடல் தகுதி இதன் மூலம் சிறப்பாக இருப்பதை புரிந்து கொள்ள முடியும்.

அவர் அடித்த இந்த சதத்தில் அவர் காட்டிய தன்னம்பிக்கை மிகவும் முக்கியமானது. நான் எப்போதும் கூறுவது போல 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் அவர் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்த வீரராக இருந்தார்.

அவர் அணியில் இல்லை என்றால் அவரைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். ஏனென்றால் அவர் எவ்வளவு சிறப்பானவர் என்று அவருக்கே புரியாதவர் போல இருந்தார். சில நேரங்களில் களத்தில் அவரிடம் நல்ல நம்பிக்கையை பார்க்க முடியாதது போல் இருந்தது.

ஆனால் தற்பொழுது பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் விளையாடிய பொழுது அந்த நம்பிக்கையை அவரிடம் பார்க்க முடிந்தது. இதேபோல அவர் ஐபிஎல் தொடரில் விளையாடி நான் பார்த்திருக்கிறேன். அதேபோல் இப்போது அவர் பேட்டிங் செய்வதை பார்ப்பதற்கு அருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!