நான் எவ்வளவோ சொல்லிட்டேன்.. சிலிண்டர் டெலிவரி வேலையை விட மறுக்கும் அப்பா.. ரிங்கு சிங் உருக்கம்!

0
1015
Rinkusingh

தற்போது அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இந்திய அணியில் தேர்வாகி இருக்கும் 25 வயதான இடது கை பேட்ஸ்மேன் ரிங்கு சிங் வாழ்க்கை, முன்னேற துடிக்கும் ஒவ்வொரு இளைஞர்களுக்குமான வழிகாட்டி பாடமாக இருக்கிறது!

உத்தரப்பிரதேசம் அலிகார் நகரில் வறுமை சூழ்ந்த குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளில் மூன்றாவதாக பிறந்தவர் ரிங்கு சிங். சிறுவயதிலிருந்தே கிரிக்கெட்டில் ஈடுபாடு இருந்த காரணத்தினால், உள்ளூர் கிரிக்கெட்டில் ஈடுபட்டு, பல கடினங்களுக்கு நடுவே உழைத்து மாநில அணிக்கு தேர்வாகி, ஐபிஎல் அணிக்கு வந்து, தற்போது அங்கும் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினால் இந்திய அணிக்கு தேர்வாகி இருக்கிறார்.

- Advertisement -

ரிங்கு சிங் தந்தை எல்பிஜி சிலிண்டர் வினியோகம் செய்யும் சாதாரண கூலித் தொழிலாளி. ஆரம்ப காலகட்டங்களில் ரிங்கு சிங் ஒருபக்கம் கிரிக்கெட் பயிற்சிகள் ஈடுபட்டாலும் கூட, கட்டாயம் தன் தந்தைக்கு தொழிலில் உதவ வேண்டிய அளவுக்கு குடும்பத்தில் வறுமை இருந்தது. அப்படி வேலை இருக்கும் பட்சத்தில் அதைச் செய்ய முடியாமல் போனால், அதற்கான தண்டனைகளையும் ரிங்கு சிங் அனுபவித்திருக்கிறார்.

மேலும் வறுமை சூழலுக்காக துப்புரவு பணியில் ஈடுபட வேண்டிய கட்டாயம் வந்த பொழுது, அதை விடவும் முடியாமல், ஏற்கவும் முடியாமல், இறுதியாக கிரிக்கெட் பக்கமாகத் திரும்பி, இன்று இவ்வளவு பெரிய உயரத்தை எட்டி இருக்கிறார்.

2018 ஆம் ஆண்டு ரிங்கு சிங் வாழ்க்கை 80 லட்சம் ரூபாய்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியதில் இருந்து மாறியது. ஆனால் இதிலும் ஒரு பின்னடைவாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் ரிங்கு சிங் இதே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 55 லட்சம் ரூபாய்க்குதான் வாங்கப்பட்டார்.

- Advertisement -

ஐபிஎல் ஏலத்தில் வாங்கப்பட்ட தொகையில் குறைந்து இருந்தாலும், ரிங்கு சிங் கொல்கத்தா அணிக்காக வெளிப்படுத்திய ஆட்டத்தின் தரம் பல மடங்கு அதிகரித்து இருந்தது. இந்த ஆண்டு 14 போட்டிகளில் கொல்கத்தா அணிக்காக விளையாடிய ரிங்கு சிங் நான்கு அரை சதங்கள் உடன் 150 ஸ்ட்ரைக்ரேட்டில் 474 ரன்கள் குவித்து பிரமாதப்படுத்தினார்.

அயர்லாந்து டி20 தொடருக்கு இந்திய அணியில் தேர்வாக இருக்கும் ரிங்கு சிங் தன் தந்தை பற்றி கூறும் பொழுது “இப்பொழுது சிலிண்டர் விநியோகம் செய்யும் தொழில் செய்ய வேண்டிய கட்டாயம் கிடையாது. இதனால் என் தந்தையிடம் இந்த வேலையை செய்ய வேண்டாம் என்று நான் கூறினேன். ஆனால் அவர் தன்னுடைய தொழிலை விடவில்லை. அது அவருடைய வாழ்க்கை. அவர் விரும்பாமல் அவரது வேலையை நம்மால் நிறுத்த முடியாது!” என்று கூறியிருக்கிறார்!