இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக மீண்டும் களத்திற்கு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள செய்தி குறித்து செய்தி வெளிவந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் இறுதி வாரத்திற்குப் பிறகு எந்தவொரு போட்டியிலும் விளையாடாத ஹர்திக் பாண்டியா, ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது அவருக்கு ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஆஸ்திரேலியா ஏ தொடர் மற்றும் அக்டோபரில் தொடங்கும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்தும் விலகும் சூழல் உருவாகியுள்ளது.
பிசிசிஐ மருத்துவக் குழுவின் பரிசோதனைக்கு பிறகு, அவர் மீண்டும் புனரமைப்பு பயிற்சிகளைத் தொடங்குவது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தெரியவந்துள்ளது. மேலும், அவர் விஜய் ஹசாரே தொடர் அல்லது சையத் முஷ்தாக் அலி தொடரின் மூலம் தனது ஃபிட்னஸை நிரூபித்த பிறகே மீண்டும் இந்திய அணிக்குத் திரும்ப முடியும்.
இதுகுறித்து பிசிசிஐ அதிகாரி பேசும்போது “இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது, ஹர்திக் பாண்டியாவின் சமீபத்திய ஸ்கேன் அறிக்கைகளில் அவரது வலது கணுக்கால் / கெண்டைக்கால் எலும்பு பகுதியில் (shin) காயம் இருப்பது தெரியவந்துள்ளது. அவருக்கு இரண்டு வாரங்கள் முழு ஓய்வு எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பிசிசிஐ மருத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் தின்ஷா பர்திவாலா ஜப்பானில் இருந்து திரும்பியதும், அவரது அறிக்கைகளைப் பார்த்து அவர் எப்போது புனரமைப்பு பயிற்சிகளைத் தொடங்கலாம் என்பதைத் தீர்மானிப்பார்” என்று கூறி இருக்கிறார்.
முன்னதாக ஆப்கானிஸ்தான் தொடருக்கு முன்பாக பயிற்சிகளின் போது அவருக்கு வலி ஏற்பட்டதாகக் குறிப்பிட்ட அதிகாரி பேசுகையில் “ஆப்கானிஸ்தான் தொடருக்கு
முன்னதாக ஃபீல்டிங் பயிற்சிகளின் போது அவர் தனது முழங்கால் பகுதியில் கடுமையான வலியைப் புகாரளித்தார்,
அதற்குப் பிறகு அவர் சில நாட்கள் ஓய்வெடுக்க முடிவு செய்தார். ஆனால் அவர் மீண்டும் மைதானத்திற்குத் திரும்பத் தயாரான நிலையில் அந்த வலி மீண்டும் உருவெடுத்துள்ளது” என்று கூறி இருக்கிறார்.