டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா மற்றும் நமீபியா அணிகள் மோதிய போட்டியில் இந்திய அணி 93 ரன்கள் வித்தியாசத்தில் சிறந்த வெற்றியை பதிவு செய்தது.
இந்த சூழ்நிலையில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலக்கிய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் குவித்தது. தொடக்க வீரர் இஷான் கிஷன் 24 பந்துகளில் 61 ரன்கள் குவிக்க, மிடில் வரிசையில் ஹர்திக் பாண்டியா 28 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸ் என 52 ரன்கள் குவித்தார்.
மேலும் பந்து வீச்சிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியா கடந்த ஒரு வருடமாக தனது உடல் தகுதியை மேம்படுத்தி இருக்கிறார். கிரிக்கெட்டுக்காக தனது உடல் தகுதியை எப்படி மேம்படுத்தினேன் என அவரே சில முக்கிய விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்
இதுகுறித்து அவர் கூறும் போது “கடந்த சில மாதங்களாகவே என்னுடைய உடல் தகுதி மற்றும் ஆட்டத்திறனை மேம்படுத்த கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டேன். அது ஒரு ராணுவ முகாம் போன்ற பயிற்சியாக இருந்தது. காலை மாலை வேலைகளில் கடுமையான பயிற்சிகளை செய்தேன். நாட்டுக்காக விளையாடுவதில் தான் எனக்கு எப்போதுமே முன்னுரிமை.
அதற்காக கூடுதல் உழைப்பை கொடுக்க முடிந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. இனி வருகிற ஆட்டங்களில் இது போன்ற சிறப்பாக விளையாட கடினமாக உழைப்பேன்” என்று ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார். இந்திய அணி தனது முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி உள்ள நிலையில் மூன்றாவது போட்டியாக பாகிஸ்தான் அணியை வருகிற 15-ம் தேதி எதிர்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.