பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் நடத்த உள்ள நிலையில் இந்திய அணி பாகிஸ்தானில் விளையாடுவது குறித்து ஆரம்பம் முதலே சில பிரச்சனைகள் இருந்து வருகிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் இந்திய அணி குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபி 2025
கடந்த முறை நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் அணி கோப்பையை கைப்பற்றிய நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்த உள்ளது. இதில் அனைத்து அணிகளும் பாகிஸ்தானுக்கு விளையாட செல்ல தயாராக இருக்கும் நிலையில் இந்திய அணி மட்டும் தொடர்ந்து மறுத்து வந்தது.மேலும் கடந்த 2008 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானுக்கு விளையாட செல்வதை முற்றிலுமாக தவிர்த்தது.
மேலும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணிக்கு பாகிஸ்தான் மக்களிடையே நிறைய அன்பும் ஆதரவும் கிடைக்கும் எனவும், எனவே பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் தொடர் விளையாடும் படியும் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பிசிசிஐ தொடர்ந்து இதற்கு மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் குறித்த சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஹர்பஜன் சிங் கருத்து
அது குறித்து ஹர்பஜன்சிங் கூறும் போது “சூழல் நன்றாக இருந்தால் யார் தான் பாகிஸ்தானுக்கு சென்று விளையாட விரும்ப மாட்டார்கள். அங்கு இந்திய அணிக்கு அதிக ஆதரவு கிடைத்தது. பாகிஸ்தான் மக்கள் அதிக அன்பை கொடுக்கின்றனர். இன்றும் விராட் கோலி மற்றும் இந்த இந்திய அணிக்கு பாகிஸ்தானில் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். மேலும் இந்திய அணி விளையாடுவதை மீண்டும் ஒருமுறை பார்க்க விரும்புகிறார்கள்.
இதையும் படிங்க:விராட் கம்பீர் செஞ்ச அது ரொம்ப சரியானது.. அதனால இந்தியா தொடரை வெல்லவும் செய்யலாம் – ரவி சாஸ்திரி பேச்சு
ஆனால் பாதுகாப்பு பிரச்சினைகள் முக்கியமாக உள்ளது. இந்தியா கடந்த காலங்களில் பாகிஸ்தானில் விளையாடியுள்ளது. இரண்டு நாடுகளுக்கும் இடையேயான நிலைமை உறவுமுறை மேம்பட்டால் இந்தியா நிச்சயமாக பாகிஸ்தான் சென்று விளையாடும்” என்று ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார். இந்திய அணி கடைசியாக 2008ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் தொடர் விளையாடிய நிலையில் அதற்குப் பிறகு ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சினைகளின் காரணமாக இந்தியா முற்றிலுமாகவே பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை தவிர்த்தது. இருப்பினும் பாகிஸ்தான் அவ்வப்போது நடைபெறும் ஐசிசி தொடர்களில் இந்தியா வந்து விளையாடுவது குறிப்பிடத்தக்கது.






