இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி உடன் பேசி 10 ஆண்டுகள் ஆகிவிட்டதாக ஹர்பஜன் சிங் பரபரப்பான கருத்தை தெரிவித்திருக்கிறார்.
இந்திய அணி இரண்டு முறை மகேந்திர சிங் தோனி தலைமையில் உலகக் கோப்பையை வென்ற பொழுது அணியில் இருந்தவரும், சிஎஸ்கே அணியில் உடன் இணைந்து விளையாடியவருமான ஹர்பஜன் சிங் தெரிவித்திருக்கும் இந்த கருத்து சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
கடைசியாக 2015 ஆம் ஆண்டு
2011 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியில் இருந்து முக்கிய வீரர்கள் நகர்த்தப்பட்டார்கள். குறிப்பாக அதில் ஹர்பஜன்சிங் மற்றும் யுவராஜ் சிங் பெயர்கள் அடங்கும். இறுதியாக ஹர்பஜன்சிங் மற்றும் தோனி இருவரும் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 2015 ஆம் ஆண்டு விளையாடி இருந்தார்கள்.
இதற்குப் பிறகு சிஎஸ்கே அணிக்கு 2018 ஆம் ஆண்டு ஹர்பஜன் சிங் விளையாட வந்தார். இருந்த போதிலும் கூட மகேந்திர சிங் தோனி உடன் தனிப்பட்ட முறையில் பேசி 10 ஆண்டுகள் ஆகிவிட்டதாக தெரிவித்திருக்கிறார். ஆனால் இதற்கு என்ன காரணம் என்று அவர் வெளிப்படையாக கூறாவிட்டாலும் கூட, மறைமுகமாக பதில் அளித்திருக்கிறார்.
10 ஆண்டுகள் ஆகிவிட்டது
இது குறித்து ஹர்பஜன் சிங் கூறும்பொழுது ” இல்லை நான் தோணியுடன் பேசுவதில்லை. 10 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. சிஎஸ்கே அணியில் இருந்த பொழுது பேசிக் கொண்டோம் அதற்குப் பிறகு கிடையாது. ஆனால் இதற்கு எந்த தனிப்பட்ட காரணமும் இல்லை. நாங்கள் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே விளையாடிய பொழுது களத்திற்குள் மட்டும் விஷயங்களை பேசினோம். அதன் பிறகு அவர் என் அறைக்கு வரவில்லை. நான் அவருடைய அறைக்கு செல்லவில்லை”
“எனக்கும் அவருக்கும் எதிராக எதுவும் இல்லை. அவர் என்னிடம் ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் சொல்லலாம். அப்படியே ஏதாவது இருந்திருந்தால் அவர் என்னிடம் சொல்லி இருப்பார். நானும்அவரை அழைக்க முயற்சி செய்யவில்லை. என் அழைப்புகளை எடுப்பவர்களை மட்டும் அழைக்கிறேன். இல்லையென்றால் எனக்கு நேரம் இருப்பதில்லை”
இதையும் படிங்க : 15 வருடம்.. 101 ரன்கள்.. பங்களாதேஷ் வரலாற்று வெற்றி.. வெஸ்ட் இண்டீஸ் அணி புள்ளி பட்டியலில் பரிதாபம்
“நான் நண்பர்களாக இருப்பவர்களுடன் தொடர்பில் இருப்பேன். உறவு என்பது எப்போதும் கொடுக்கல் வாங்கல் பற்றியது. நான் உங்களை மதிக்கிறேன் என்றால் நீங்களும் என்னை மதிப்பீர்கள் என்று நம்புகிறேன். நான் அழைத்து நீங்கள் ஒரு முறை அல்லது இரு முறைக்கு மேல் பதில் அளிக்கவில்லை என்றால் நான் உங்களிடம் தொடர்பு கொள்ள மாட்டேன். தேவைக்கு மட்டுமே சந்திப்பேன்” என்று கூறியிருக்கிறார்.