தற்போது விஜய் ஹசாரே டிராபியில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் கருண் நாயருக்கு இந்திய அணிகள் இடம் கொடுக்காதது ஏன் என இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் மிகவும் காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார்.
இந்திய உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே டிராபியில் கருண் நாயர் மொத்தம் ஆறு போட்டிகளில் ஐந்து சதங்கள் உட்பட 664 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் இவருடைய ஸ்ட்ரைக் ரேட் 120 என சிறப்பாக இருக்கிறது. மேலும் இந்த ஆறு போட்டிகளில் ஒரு முறை மட்டுமே அவர் ஆட்டம் இழந்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
2016 ஆம் ஆண்டு முச்சதம்
2016 ஆம் ஆண்டு இந்தியாவில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி ஒன்றில் ஆட்டம் இழக்காமல் 303 ரன்கள் குவித்தார். பிறகு இங்கிலாந்து சென்ற இந்திய அணியில் இடம் பெற்ற அவருக்கு 2018 ஆம் ஆண்டு விளையாட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அத்துடன் முதலில் ஹர்திக் பாண்டியாவுக்கு அவரது இடத்தில் வாய்ப்பு கொடுத்து அடுத்து ஹனுமா விகாரிக்கு வாய்ப்பைக் கொடுத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஹர்பஜன் சிங் பேசும் பொழுது “நான் அவரது புள்ளி விவரங்களை பார்க்கிறேன், அவர் தற்போது ஆறு போட்டிகளில் விளையாடி ஐந்து சதங்கள் எடுத்திருக்கிறார். மேலும் 664 ரன்கள் குவித்திருக்கிறார். இதில் அவர் ஐந்து முறை ஆட்டம் இழக்காமலும் இருந்திருக்கிறார். மேலும் அவருடைய ஸ்ட்ரைக் ரேட் ஒருநாள் கிரிக்கெட்டில் 120 என தற்போது இருக்கிறது. இப்படி இருந்தும் அவரை தேர்வு செய்யவில்லை இது மிகவும் நியாயமற்றது”
டாட்டூ போடாததால் தேர்வு செய்யவில்லையா?
“இந்தியாவில் முச்சதம் அடித்த அவரை இங்கிலாந்தில் வைத்து கழட்டிவிட்டார்கள். அவருடைய இடத்துக்கு ஹனுமா விகாரியை கொண்டு வந்தார்கள். போதுமான வாய்ப்பையே அவருக்கு கொடுக்காமல் அவருடைய இடத்திற்கு இன்னொரு வீரரை கொண்டு வந்தது சரியான ஒன்று கிடையாது”
இதையும் படிங்க : கம்பீர் மைதானத்துக்கு போய் விளையாட முடியாது.. அவர் இப்படிப்பட்ட ஆள்தான் – கபில்தேவ் பேச்சு
“தற்பொழுது இந்திய முன்னணி வீரர்களை சரியாக விளையாடவில்லை என்று ரஞ்சி கிரிக்கெட்டுக்கு கொண்டு வருகிறார்கள். ஆனால் ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்? கையில் டாட்டூ போடாமல் விலை உயர்ந்த உடைகளை அணியாததால் கருண் நாயரை இந்திய அணிக்கு நீங்கள் தேர்வு செய்யவில்லையா? என்று கேள்வி எழுப்பி இருக்கிறார்.






